ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: இந்தியாவுக்கு ஐ.நா. பாராட்டு!

ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு புயலின் போது உயிரிழப்புக்களை குறைத்தமைக்காக இந்தியாவுக்கு ஐ.நா. பாராட்டு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் குறைப்பு முகாமையகம் இந்த பாராட்டினைத் தெரிவித்துள்ளது.
சென்னை அருகே வங்கக் கடலில் உருவான ஃபானி புயல் தீவிர புயலாக மாறி ஒடிசா நோக்கி சென்றது. ஒடிசா மாநிலத்தின் கோபால்பூர்-சந்த்பாலி இடையே நேற்று ஃபானி புயல் கரையைக் கடந்தது. இதனால், புரி, புவனேஷ்வர் என மாநிலம் முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த புயல் தொடர்பான சம்பவங்களில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த புயல் பெருமளவான உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் என்ற அச்ச நிலையில், மாநில அரசுகள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் அதிக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
இதையடுத்தே, பேரிடரின் போது சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ஐ.நா.விடமிருந்து இந்த பாராட்டு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.