அகில இலங்கை இந்து சம்மேளனம் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தது!

அகில இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவர் நரா.அருண்காந்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை கண்டி, ஹலகா பலலேகல தோட்டத்தில் ஆரம்பித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல். எம். ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோரை உடனடியாக கைதுசெய்து அவர்களிடம் விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே அவர் இந்த உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இலங்கை இந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை), காலை 8 மணிக்கு சம்மேளனத் தலைவர் நரா.அருண்காந்தி ஆரம்பித்த இந்த போராட்டத்தில் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் இந்து மத குருமார்கள் மற்றும் பௌத்த துறவிகள் கலந்துகொண்டனர்.
இந்த உண்ணாவிரத போராட்டம் குறித்து அருண்காந்தி தெரிவிக்கையில், “கடந்த 30 வருடங்களாக, ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் காலத்தில் அவர் கிழக்கு மாகாணத்தை இஸ்லாமிய மயப்படுத்தியுள்ளார். அதேவேளை பல்வேறுபட்ட மத தீவிரவாத நடவடிக்கையை இரகசியமாக மேற்கொண்டுள்ளார்.
அத்துடன் கடந்த 20 வருடங்களாக வெளிநாடுகளில் இருந்து கூட்டிவந்து மதரசாக்களில் கல்வி பயின்ற இளைஞர்கனை மூளைச்சலவை செய்ததன் விளைவாகவே அங்கு சஹ்ரான் போன்றோர் உருவானார்கள்.
அதன்பின்னர் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பது, மதம் மாற்றுவது, அவர்களுடைய வர்த்தக தளங்களைப் பறிப்பது, பொது நிறுவனங்களை அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி பறிப்பது போன்று எல்லாவகையிலும் கிழக்கு மாகாணத்தை இஸ்லாமிய மயப்படுத்த பதவியை ஹிஸ்புல்லாஹ் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இதனிடையே, 21ஆம் திகதி ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இவருடன் தொடர்பு இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கின்றோம். அதேவேளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கைப்பையுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தார். இன்று ஆயிரத்து 800 கோடி ரூபாய்க்கு சொந்தக்காராக இருக்கின்றார்.
இந்த பணம் இலங்கையில் சம்பாதித்ததா? அல்லது அரேபிய நாடுகளில் இருந்து வேறு தேவைகளுக்காக அனுப்பப்பட்டதா? என பெரும் சந்தேகம் எழுகின்றது.
எனவே, இவர்கள் அனைவருமே பயங்கரவாதத்திற்கு மறைமுகமாக உதவி புரிந்துள்ளதாக பல குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன. ஆகவே கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோரைக் கைதுசெய்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்” என அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.