அடுத்த ஜனாதிபதியும் நிறைவேற்று அதிகாரம் உடையவராகவே இருப்பார் – அஜித்

அடுத்த ஜனாதிபதியும் நிறைவேற்று அதிகாரம் உடையவராகவே இருப்பார் என டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அரசியலமைப்பை மாற்றியமைப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமான விடயமல்ல எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நிறைவேற்று அதிகாரம் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் தெரிவிக்கையில், “புதிய ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் நீக்கப்பட வேண்டமானால் அரசியலமைப்பில் இதுவரையில் திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்படாமல் உள்ள 4ஆவது உறுப்புரை, சர்வஜன வாக்கெடுப்பொன்றில் மக்கள் அங்கீகாரத்துடன் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவோடு திருத்தப்பட வேண்டும்.
இனவாதத்தினூடாக இவ்வளவு காலமும் ஆட்சி புரிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மக்களின் ஆதரவு கிடைக்கப்போவதில்லை. அதையும் மீறி பொதுஜன முன்னணி சார்பில் ராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்த ஒருவர் களமிறக்கப்படுவாராக இருந்தால் அவர் தோல்வியின் சின்னமாக கருதப்படுவார்.
2020 ஆம் ஆண்டு புதிதாக தெரிவாகவுள்ள ஜனாதிபதியும் நிறைவேற்று அதிகாரம் கொண்டவராகவே காணப்படுவார். ஆகவே நடைமுறையில் உள்ள அரசியலமைப்புக்கு அமைவாக ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரமுடையவராகவே இருக்கிறார்” என அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.