அடை மழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் கிழக்கு மாகாணம்
In இலங்கை December 23, 2020 4:07 am GMT 0 Comments 1590 by : Dhackshala
கிழக்கில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழைக் காரணமாக, பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால், தங்களின் அன்றாட வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உரிய அதிகாரிகள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
திருகோணமலை வெருகல் பிரதேச செயலக பிரிவில் மட்டும் சுமார் 20 குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.
இலங்கைத்துறை, இலங்கைத்துறை முகத்துவாரம், கறுக்காமுனை, வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடரும் காலநிலை நீடித்தால் பெரும்போக செய்கைக்கு பாதிப்பு ஏற்படலாம் என எதிர்வுகூரப்படுகிறது.
மேலும் வெருகல் பகுதியில் அமைந்துள்ள நாதன் ஓடை அணைக்கட்டு உடைப்பெடுக்கும் அபாயநிலை ஏற்பட்டுள்ளமையால் அதனை பாதுகாக்கும் பணியில் பிரதேசவாசிகள் மும்முறமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த அணைக்கட்டானது உடைப்பெடுக்குமேயானால் பாரிய சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, அம்பாறை மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக பெய்த பலத்த மழைக் காரணமாக மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, கடற்றொழில் நடவடிக்கையும் ஸ்தம்பித்துள்ளது.
குறிப்பாக பெரிய நீலாவணை, மருதமுனை, நற்பிட்டிமுனை, கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, நாவிதன்வெளி உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழைக் காரணமாக நீர் நிலைகள் யாவும் நிரம்பியுள்ளதுடன், சில தாழ்நில நெற் செய்கை வயல் நிலங்களும் முற்றாக வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடக்கைப் பொறுத்தமட்டில், கிளிநொச்சி இரணைமடு குளத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரணைமடு நீரேந்தும் பகுதியில் பெய்த மழை காரணமாக நீர் வருகை அதிகரித்தமையால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
36 அடி கொள்ளளவு கொண்ட குளம் 33 அடி 06 அங்குலமாக தற்போது காணப்படுவதாகவும் இங்கு நீர் வருகை தொடர்ந்தும் அதிகரித்தால் மேலும் வான் கதவுகள் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குளத்தை அண்டிய மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.