அணுசக்தி மையங்களில் ஐ.நா. கண்காணிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை அமுல்படுத்தியது ஈரான்!

ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி அமைப்பு (ஐஏஇஏ), தங்கள் நாட்டு அணுசக்தி நிலையங்களில் மேற்கொண்டு வரும் கண்காணிப்பைக் கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை ஈரான் உத்தியோகபூர்வமாக அமுல்படுத்தத் தொடங்கியுள்ளது.
அணுசக்தி ஒப்பந்தத்தின்படி தங்கள் நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கிக்கொள்ளப்படாவிட்டால், ஐஏஇஏ-வுடனான தங்களது ஒத்துழைப்பு நிறுத்தப்படும் என்ற எச்சரிக்கையை இதன் மூலம் ஈரான் வெற்றிகரமாக வெளிப்படுத்தியுள்ளது.
எனினும், சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு எத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவான விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
ஐ.நா. கண்காணிப்பாளர்களுக்கு அணுசக்தி மையங்களின் கண்காணிப்பு கெமரா பதிவுகளை அளிப்பதற்குத் தடை விதிக்கும் தீர்மானம் ஈரான் நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது.
தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள எண்ணெய் ஏற்றுமதி தடை மற்றும் சர்வதேச வங்கிப் பரிவர்த்தனைத் தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள ஐரோப்பிய நாடுகள் மேற்கொள்ளாவிட்டால், ஐஏஇஏ-வுக்கு கண்காணிப்பு கெமரா பதிவுகள் அளிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இதுதொடர்பான தாமதம் காரணமாக, அணுசக்தி மையங்களின் கண்காணிப்பு கெமரா பதிவுகளை கையளிக்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.