வட கொரியாவுக்கு விஜயம் செய்த தென்கொரிய அதிபருக்கு அமோக வரவேற்பு!
தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் வட கொரியாவுக்கு விஜயம் செய்துள்ள நிலையில் பியாங்யோங் சுனான் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு ஜனாதிபதி கிம் ஜொங் உன் விசேட வரவேற்பளித்துள்ளார்.
கிம்முடனான மூன்றாவது கட்ட சந்திப்பில் ஈடுபடும் நோக்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மூன் வடகொரியாவை சென்றடைந்தார்.
பியாங்யோங்கிற்கும், வொஷிங்டனுக்கும் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மேலும் ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாகவே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இந்த கொரிய உச்சிமாநாடு மற்றொரு சந்திப்புக்கு வழிகோலும் வகையிலும் இருக்கும் என்று அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு, கிம் முன்மொழிந்திருந்தார்.
கிம் தனது அணுகுமுறை பற்றி தீவிரமாக உள்ளாரா என்பதை அறிவதற்கும், ஜூன் மாதம் முதல் சந்திப்பில் அவர் செய்த உறுதிமொழி தொடர்பாக தற்போதைய நிலைப்பாட்டை தெரிந்து கொள்வதற்கும் இந்த சந்திப்பு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் அமெரிக்க ராஜாங்க செயலாளரின் வடகொரிய விஜயத்தை ரத்து செய்த பின்னர், தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன்னை தலைமை மத்தியஸ்தராக செயற்படும்படி ட்ரம்ப் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.