அநாவசியமான விடயங்களைக் கூறி அவசியமானவற்றை மறைத்துவிட்டனர் – மைத்திரி சாடல்
நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக அநாவசியமான விடையங்களை பேசியவர்கள் அவசியமான விடயத்தை தன்னிடம் மறைத்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவிற்கு ஜனாதிபதி இன்று (வெள்ளிக்கிழமை) தனது வாக்குமூலத்தை அளித்திருந்தார். இதன்போதே அவர் இவ்விடையத்தினை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையின் முக்கிய தேவலையங்கள் மற்றும் பிரபல விடுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து அது தொடர்பாக விசாரணை செய்வதற்காகவும், நாடாளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காகவும் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து அவரது வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டது.
தெரிவுக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி மற்றும் ஏனைய உறுப்பினர்களே இவ்வாறு தமது விசாரணை நடவடிக்கையை முன்னெடுத்தனர். சுமார் இரண்டு மணிநேரம் இடம்பெற்ற இந்த விசாரணைகளின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் கேட்கப்பட்டன.
இந்நிலையில், ஈஸ்டர் தாக்குதலை நடத்திய சஹ்ரான் குறித்தும் இவ்வாறான ஒரு தாக்குதல் திட்டம் இருப்பது தெரிந்தும் பொலிஸ்மா அதிபரோ பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவோ தன்னிடம் எதனையும் தெரிவிக்கவில்லை எனவும், அநாவசியமான விடயங்கள் குறித்து தன்னிடம் பேசியவர்கள் அவசியமான விடயத்தை மறைத்து விட்டதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாதுகாப்பு குழுக்கூட்டம் நம்பிக்கைக்குரிய இடம் என தான் கருதவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த விசாரணை நடவடிக்கையின் பொது ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.