அனைத்து துறைகளுக்கும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவை அறிமுகப்படுத்துமாறு ஜனாதிபதி வலியுறுத்து
In இலங்கை February 17, 2021 7:06 am GMT 0 Comments 1204 by : Dhackshala

உலகளாவிய மாற்றங்களுடன் இலங்கை வேகமாக தகவமைதல் வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார்.
அத்தோடு, கல்வித் துறைகள் எதுவானாலும் அனைத்து துறைகளுக்கும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவை அறிமுகப்படுத்துமாறும் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களிடமும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
பட்டதாரிகளுக்கு புதிய தொழில்நுட்பத்தைப் பற்றி குறிப்பிட்டளவு அறிவு இருக்க வேண்டும் என்றும் குறைந்தபட்சம் ஒரு கணினியை இயக்குவதற்கான விடய அறிவு இருக்க வேண்டும் என்பது வெற்றிகரமான எதிர்காலத்தை உருவாக்க உதவும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
கல்வித் துறைகள் எதுவானாலும் அனைத்து துறைகளுக்கும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவை அறிமுகப்படுத்துமாறு ஜனாதிபதி அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களிடமும் கேட்டுக்கொண்டார்.
பல்கலைக்கழக கல்விக்கு தெரிவு செய்யப்படும் அனைத்து மாணவர்களும் திறமைவாய்ந்தவர்கள். அவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழையும்போது அவர்கள் விரும்பும் ஒரு பாடத்தைத் தேர்ந்தெடுப்பதில் குறைபாடு இருந்தால், அது கல்வி முறைமையின் குறைபாடேயன்றி மாணவர்களின் குறைபாடு அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மட்டத்தை அடைந்தவுடன் அவர்களிடமுள்ள திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான வசதிகளும் வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறைகளில் அதிக கவனம் செலுத்துவது சர்வதேச அளவில் இலங்கை பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்துவதில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
உயர் சாதனையாளர்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும் பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றுக்கும் இடையில் போட்டித்தன்மை காணப்பட வேண்டும்.
இது பீடங்கள் அல்லது பணிக்குழாமினருடன் மட்டுப்படுத்தப்படாது, மாணவர்களுக்கும் திறந்திருக்க வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் நிர்வாக சபை, துணைவேந்தர், பீடங்கள் மற்றும் பணிக்குழாமினர் தங்கள் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களைத் தீர்மானிக்க, திட்டமிட மற்றும் நிர்வகிக்க தேவையான சுதந்திரம் இருக்க வேண்டும்.
அதேபோன்று அவர்களுக்கு தங்கள் நிறுவனங்களில் படிக்க பொருத்தமான மாணவர்களை தெரிவு செய்யவும் சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டால், உலகம் வேகமாக மாறினாலும், நமது பல்கலைக்கழகங்களை உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த நிறுவனங்களாக மாற்ற முடியும் என்றும், இதன் மூலம் இளைஞர் யுவதிகளுக்கு எதிர்கால முன்னேற்றத்தை வழங்கி நாட்டின் பொருளாதாரத்தையும் வலுப்படுத்த முடியும் என்று ஜனாதிபதி கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.