அனைத்து பாடசாலைகளிலும் கடுமையான சோதனை!
In இலங்கை May 5, 2019 9:02 am GMT 0 Comments 2510 by : Dhackshala
கடந்த மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலையடுத்து, நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக நாடளாவிய ரீதியாக அனைத்து பாடசாலைகளும் கடந்த 22ஆம் திகதியிலிருந்து மூடப்பட்டிருந்தன.
அதனைத்தொடர்ந்து முப்படையினர், விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் இணைந்து தொடர்ச்சியாக இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தரம் 6 இற்கு மேற்பட்ட வகுப்புக்களுக்கு நாளை (திங்கட்கிழமை) இரண்டாம் தவனைக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.
இதனை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் சோதனை நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், இன்று கிளிநொச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் பாதுகாப்புத் தரப்பினரால் கடுமையான சோதனைக்குட்படுத்தப்பட்டன.
கிளிநொச்சி மகாவித்தியாலயம், கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகளிலேயே இந்த தீவிரமான தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதேநேரம், வவுனியா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளும் இன்று தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இனைந்து இந்த தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது பாடசாலை வளாகம் மற்றும் பாடசாலையின் கட்டங்கள் அனைத்தம் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அத்தோடு, ஹட்டன், நோர்வூட், பொகவந்தலாவ, மஸ்கெலியா, கொட்டகலை, தலவாக்கலை, அக்கரப்பத்தனை, நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளும் இன்று கடுமையான சோதனைக்குட்படுத்தப்பட்டன.
இதேவேளை, கொழும்பில் உள்ள பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களை நிறுத்துவதற்காக விஷேட தரிப்பிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மாத்திரம் நிறுத்தப்பட வேண்டும் என்று பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.