அனைத்து மதங்களும் சமமாக மதிக்கப்படவேண்டும் – துரைரட்ணசிங்கம்
In ஆசிரியர் தெரிவு April 28, 2019 7:10 am GMT 0 Comments 3684 by : Dhackshala
அனைத்து மதங்களும் சமமாக மதிக்கப்படவேண்டுமென திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத செயலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களது ஆத்ம சாந்திக்காக திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய பரிபாலன சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புப் பூஜை வழிபாடு மற்றும் அஞ்சலி நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றது. இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், ஒரு மதத்திற்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து அரச மதமாக மாற்றப்படும்போது ஏனைய மதத்தினர் அதிருப்தியடைய வேண்டிய நிலை ஏற்படுவதாக தெரிவித்தார். இந்நிலை முற்றாக மாற்றப்படவேண்டும் என்பதோடு இங்குள்ள அனைத்து மதங்களும் சமமாக மதிக்கப்படவேண்டும் என வலியுறுத்தினார். அத்தோடு எப்போது மதம் வெறியாக மாறுகின்றதோ அப்போதுதான் இவ்வாறான செயற்பாடுகள் நிகழ்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் அனைத்து அரசியல் கட்சிகளும் இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற நிலைக்கு பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்த அவர், குறிப்பாக கட்சி மற்றும் அவர்களது அரசியல் இருப்பு தொடர்பாக சிந்திக்கின்ற அளவிற்கு நாட்டின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் சிந்திக்கும் தன்மை மிகக்குறைவாகக் காணப்படுவதாக தெரிவித்தார்
தாம் விட்ட தவறுகளை உணர்ந்து எதிர்காலங்களில் இவ்வாறானதோர் நிலை ஏற்படாதவாறு எமது நாட்டை பாதுகாப்பது அனைத்து அரசியல் தலைமகளினதும் கடமை என்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.