அமெரிக்கப் பெண் ஆன் சாகூலஸ் மீது பிரித்தானியா குற்றச்சாட்டு

ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தி ஹரி டன்னின் மரணத்துக்குக் காரணமாக இருந்தார் என அமெரிக்கப் பெண் ஆன் சாகூலஸ் மீது குற்றம் சாட்டப்படும் என்று கூறப்படுகின்றது.
கடந்த ஓகஸ்ற் மாதம் 27 ஆம் திகதி நோர்தம்ப்ரன்ஷயர், கிரவுற்ரன் (RAF Croughton) அருகே ஹரி டன் என்னும் 19 வயதானவர் பயணித்த மோட்டார் சைக்கிள், ஆன் சாகூலாஸ் செலுத்திய வொல்வோ (Volvo) காருடன் மோதி விபத்துக்குள்ளானது.
அந்த விபத்துக் காரணமாக ஹரி டன் உயிரிழந்தார். இந்த உயிரிழப்புக் குறித்து பொலிஸார் விசாரணை செய்தபோது ஆன் சாகூலாஸ் ராஜதந்திரப் பாதுகாப்பினைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்குப் புறப்பட்டுச் சென்றார்.
ஹரி டன்னின் உயிரிழப்புக் குறித்த விசாரணைக் கோப்புக்கள் நொவெம்பர் 1 ஆம் திகதி அரச வழக்கு விசாரணைச் சேவையிடம் (CPS) ஒப்படைக்கப்பட்ட பின்னர் ஆன் சாகூலாஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லண்டனுக்கு வெளியே தூதரக அதிகாரிகளைச் சார்ந்து இருப்பவர்களுக்கு ராஜதந்திரப் பாதுகாப்பு பொருந்தாது என்று அரச வழக்கு விசாரணைச் சேவை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரியான ஜொனாதன், கிரவுற்ரனில் உள்ளநிலையில் அவரது மனைவி ஆன் சாகூலாஸ் விபத்தின் பின்னர் இங்கிலாந்தினை விட்டு வெளியேறி அமெரிக்கா சென்றார்.
ரஃப் கிரவுற்ரனில் உள்ள அமெரிக்கப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான ராஜதந்திரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.
அன் சாகூலாஸ் ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தி மரணத்தை ஏற்படுத்தினார் என்று குற்றம் சாட்டுவதற்கு அரச வழக்கு விசாரணைச் சேவை இன்று நோர்தம்ப்ரன்ஷயர் பொலிஸாருக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
அரச வழக்கு விசாரணைச் சேவையின் இயக்குநர், உயிரிழந்த ஹரி டன்னின் குடும்பத்தினரைச் சந்தித்து, தாம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை விளக்கியுள்ளார்.
நன்றி bbc.co.uk
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.