அமெரிக்காவின் இராணுவ தலையீட்டை கோருவதற்கு வெனிசுவேலா எதிர்க்கட்சி திட்டம்

வெனிசுவேலாவில் அரசியல் நெருக்கடிகள் நீடித்து வருகின்ற நிலையில், நாட்டிற்குள் அமெரிக்காவின் இராணுவ தலையீட்டை கோரவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் குவைடோ தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே வெனிசுவேலா எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவை ஆட்சியிலிருந்து நீக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி கடந்த வாரம் இராணுவ எழுச்சியை தூண்டிவிட்டு மதுரோவின் ஆட்சியை கவிழ்ப்பதற்கான முயற்சியில் எதிர்க்கட்சி தலைவர் ஈடுபட்டார். ஆனால், அந்த ஆட்சிகவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மதுரோ அரசாங்கமே காரணம் என சுட்டிக்காட்டி அவரை பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சி தலைவர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் தன்னை இடைக்கால ஜனாதிபதியாகவும் அறிவித்துக் கொண்டார்.
எதிர்க்கட்சி தலைவரின் இந்த அறிவிப்பை அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட 50 நாடுகள் வரவேற்றன. ஆனால், ரஷ்யா, சீனா மற்றும் நாட்டின் உயர்மட்ட இராணுவம் என்பன தொடர்ந்தும் ஜனாதிபதி மதுரோவை ஆதரித்து வருவதுடன், போட்டியாளரிடம் தலைமைத்துவத்தை ஒப்படைப்பதற்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.