அமெரிக்காவின் பரிந்துரைக்கமைய சிரியாவில் பாதுகாப்பு வலயம்: துருக்கி அறிவிப்பு
அதிகரித்துவரும் பதற்றங்களை குறைக்கும் வகையில் வடக்கு சிரியாவில் பாதுகாப்பு வலயமொன்றை ஸ்தாபிக்க துருக்கி தீர்மானித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பரிந்துரைக்கமைய இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்புடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஆக்கபூர்வமான தொலைபேசி உரையாடலின் போது சிரிய எல்லைக்கு அருகே 32 கிலோமீற்றர் பாதுகாப்பு வலயமொன்று துருக்கி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட வேண்டும் என ட்ரம்ப் பரிந்துரைத்தாக எர்டோகன் குறிப்பிட்டார்.
மேலும் குறித்த உரையாடலின்போது அமெரிக்க ஜனாதிபதியுடன் வரலாற்று ரீதியான புரிந்துணர்வு எட்டப்பட்டதாக தெரிவித்த ஜனாதிபதி எர்டோகன், அது குறித்து விளக்கமளிக்க மறுத்துள்ளார்.
சிரியாவிலிருந்து தமது துருப்புக்களை திரும்பப் பெறுவது தொடர்பான அமெரிக்காவின் அறிவிப்பினால் ஏற்பட்ட கடும் முரண்பாடுகளுக்கு மத்தியில் இந்த தொலைபேசி உரையாடல் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் அராஜகம் செய்து வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் அமெரிக்க படையினர் சிரியாவிற்குள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், தற்போது சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை தோல்வியுற செய்து விட்டதாக தெரிவித்து அமெரிக்க படையினரை மீளப் பெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அதிரடியாக அறிவித்தார்.
அதனை தொடர்ந்து சிரியாவிலுள்ள குர்திஷ் படைகள் மீது இராணுவத் தாக்குதல் நடத்த உள்ளதாக துருக்கி அறிவித்தது. இந்த விவகாரம், அமெரிக்கா, துருக்கி இடையே மோதல் சூழலை உருவாக்கியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.