அமெரிக்காவின் பொருளாதார தடைகளை முறித்துக் கொள்ள தயார் – ஈரான் ஜனாதிபதி பதிலடி!
In அமொிக்கா November 5, 2018 11:14 am GMT 0 Comments 1570 by : ஜெயச்சந்திரன் விதுஷன்
அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை முறித்துக் கொள்ளவுள்ளதாக ஈரான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.
பொருளாதார அதிகாரிகளுடன் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக அமெரிக்கா கடந்த மே மாதம் அறிவித்தது.
அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் விரசல் ஏற்பட்டு வந்தது. குறித்த ஒப்பந்தத்தின் பிரகாரமே, ஈரான் மீது ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைகளை அமெரிக்கா தளர்த்தியிருந்தது.
இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா தற்போது விலகியுள்ள நிலையில், ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த சகல தடைகளையும் மீள நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது.
இந்நடவடிக்கையானது ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி, வங்கி செயற்பாடுகள், கப்பற்றுறை போன்ற முக்கிய துறைகளை பாதிப்பதால் ஈரானின் பொருளாதாரத்தில் அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் இதனை மீறி ஈரான் “எண்ணெய் ஏற்றுமதி செய்வது தொடரும்” என்று தெரிவித்துள்ள ருஹானி, நாங்கள் பெருமையுடன் பொருளாதார தடைகளை உடைப்போம் என்றும் தெரிவித்தார்.
மேலும் ஈரானின் அணுசக்தி நடவடிக்கையில் இருந்தே அமெரிக்கா விலகியுள்ளது, ஆனால் வர்த்தக உடன்படிக்கையில் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகள் இருப்பதால், தடைகளைத் தாண்டிய வர்த்தகத்திற்கு அவர்கள் உதவுவார்கள் என்றும் இருப்பினும் அது எவ்வளவு வெற்றிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகங்கள் உள்ளதாக ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.