அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு இழப்பீடு கோரும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியது சீனா!

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளில் இருந்து தங்களது நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் சீனா புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது.
நியாயப்படுத்த முடியாத வெளிநாட்டு சட்டங்களை அமுல்படுத்துவதில் இருந்து நிறுவனங்களை பாதுகாக்கும் விதமாக புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக சீன வணிக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சட்டத்தின்படி வெளிநாட்டு சட்டங்களால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அத்துடன் சேதத்துக்கு இழப்பீடு கோரலாம்.
உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே பல ஆண்டுகளாக பல்வேறு விவகாரங்களில் மோதல் ஏற்பட்டு வருகின்றது.
வர்த்தக போர், தென் சீன கடல் விவகாரம், உய்கூர் இன முஸ்லிம்கள் மீது அடக்குமுறை, கொரோனா வைரஸ் விவகாரம், ஹொங்கொங் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட விடயங்களில் சீனாவுக்கும் அமெரிக்காவும் மோதல்நிலை நிலவுகின்றது.
இதனால், பன்னாட்டுத் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாய் உட்பட பல சீன நிறுவனங்கள் அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.