அமெரிக்காவில் இன்று முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிப்பு
In அமொிக்கா December 14, 2020 3:35 am GMT 0 Comments 1470 by : Dhackshala

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் இன்று (திங்கட்கிழமை) முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக இந்த வார இறுதிக்குள் 30 இலட்சம் தடுப்பூசிகள் அனைத்து மாகாணங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என கொரோனா தடுப்பூசி விநியோகத் திட்டங்களை கவனிக்கும் மூத்த இராணுவ அதிகாரி குஸ்டாவ் பெர்னா கூறினார்.
கொரோனாவை ஒழிப்பதில் 95 சதவீதம் செயன்திறன் கொண்ட பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி இங்கிலாந்தில் ஏற்கனவே மக்களின் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
இதுதவிர பக்ரைன், சவுதி அரேபியா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் பைசர் தடுப்பூசியை அவசரத் தேவைக்குப் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.