அமெரிக்காவுடனான பதற்றத்திற்கு மத்தியில் ஜப்பான் பிரதமர் ஈரான் விஜயம்

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக, ஜப்பான் தேசிய தொலைக்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது.
ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வருகின்றமை உலகின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையிலேயே இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஜுன் மாத நடுப்பகுதியளவில் ஜப்பான் பிரதமர் ஈரானுக்கு விஜயம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான்கு தசாப்த காலத்தில் ஜப்பான் பிரதமரொருவர் ஈரானுக்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது.
ஈரான், வல்லரசு நாடுகளுடன் 2015ஆம் ஆண்டு அணு ஆயுத ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. இவ்வொப்பந்தம் ஈரான் அணு ஆயுத செயற்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வரவும், அதற்கு ஏற்ப அந்நாட்டின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளை திரும்பப் பெறவும் வழிவகுக்கிறது.
இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக ட்ரம்ப் அதிரடியாக அறிவித்தார். இது அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.