அமெரிக்க அரசாங்கம் மீதான சைபர் தாக்குதலுக்கு காரணம் ரஷ்யா அல்ல சீனா – ட்ரம்ப்
In அமொிக்கா December 21, 2020 3:48 am GMT 0 Comments 1669 by : Dhackshala

அமெரிக்க அரசாங்கம் மீதான சைபர் தாக்குதலுக்கு காரணம் ரஷ்யா அல்ல சீனாவே என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க அரசின் முக்கிய துறைகளையும் பல தனியார் நிறுவனங்களையும் குறிவைத்து பல மாதங்களாக சைபர் தாக்குதல் நடந்து வந்ததை அமெரிக்க அதிகாரிகள் அண்மையில் கண்டுபிடித்தனர்.
இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகளும் தனியார் நிறுவனங்களும் சந்தேகம் தெரிவித்தன.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோவும் அமெரிக்க அரசு மீதான சைபர் தாக்குதலுக்கு ரஷ்யாதான் காரணம் என கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் இதற்கு முரணான கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது சைபர் தாக்குதலுக்கு ரஷ்யா அல்ல சீனாதான் காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘சைபர் தாக்குதலின் பாதிப்புகள் உண்மையில் இருப்பதைவிட போலி ஊடகங்களில் மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளன. இது பற்றி எனக்கு முழுமையாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எல்லாமே கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த நாச வேலையில் ஈடுபட்டது சீனாவாக இருக்கலாம். ரஷ்யா இல்லை. சீனாவின் பங்கு பற்றி விவாதிப்பதற்கு ஊடகங்கள் பயப்படுகின்றன’ என தெரிவித்துள்ளார்.
அதே சமயம் சைபர் தாக்குதல் தொடர்பாக சீனா மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் எந்தவித ஆதாரங்களையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.