அமெரிக்க தடையால் கியூபாவின் எதிர்காலம் கேள்விக்குறி – சீனா
கியூபாவின் எதிர்கால நன்மைகருதி, அந்நாட்டின் மீதான தடையை அமெரிக்கா விரைவில் நீக்கவேண்டுமென சீனா வலியுறுத்தியுள்ளது.
பீஜிங்கில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போது, கியூபாவிற்கெதிரான தடை தொடர்பான சீனாவின் நிலைப்பாட்டை ஊடகவியலாளர்கள் வினவினர். அதற்கு பதிலளித்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லூ காங் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஒருநாட்டின் மீதான ஒருதலைப்பட்சமான தடைகளை சீனா எப்போதும் எதிர்ப்பதாக குறிப்பிட்ட அவர், கியூபா மீதான நீண்டகால பொருளாதார தடை அந்நாட்டின் பொருளாதார, சமூக அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை வெகுவாக பாதிக்கின்றதென மேலும் குறிப்பிட்டார்.
இதனைக் கருத்திற்கொண்டு, குறித்த தடைகளை அமெரிக்கா நீக்கவேண்டுமென ஐ.நா. பொதுச்சபை தொடர்ச்சியாக தீர்மனாங்களை நிறைவேற்றியதை லூ காங் இதன்போது நினைவுபடுத்தினார்.
இதேவேளை, நாடுகளுக்கிடையிலான பரஸ்பர உறவை வலுப்படுத்தும் வகையில் சீனா எப்போதும் செயற்படும் என்றும் பரஸ்பர மரியாதை, சமத்துவம், சமாதானம் சகவாழ்வு என்பவற்றை கருத்திக்கொண்டு பல திட்டங்களை முன்னெடுப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையில், கியூபா மீதான தடைகளை அமெரிக்கா மிக விரைவில் நீக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
1959ஆம் ஆண்டிலிருந்து கியூபாவிற்கு எதிராக அமெரிக்கா நீண்டகால தடைகளை அமுல்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.