அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் தலைவராக நான்சி பெலோசி நான்காவது முறையாக தேர்வு!

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை (கீழவை) தலைவராக ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினரான நான்சி பெலோசி, நான்காவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பிரதிநிதிகள் சபை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பில், தற்போதைய பிரதிநிதிகள் சபை தலைவரான ஜனநாயக கட்சியை சேர்ந்த 80 வயதான நான்சி பெலோசிக்கும் குடியரசு கட்சியின் கெவின் மெக்கர்த்திக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
பதிவான 427 வாக்குகளில் நான்சி பெலோசி 216 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கெவின் மெக்கர்த்திக்கு 209 வாக்குகள் கிடைத்தன. செனட்டர் டாமி டக்வொர்த், ஹக்கீம் ஜெஃப்ரீஸ் ஆகியோருக்கு தலா ஒரு வாக்கு கிடைத்தது.
கடந்த நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சி 11 இடங்களை இழந்ததால் அக்கட்சிக்கு பிரதிநிதிகள் சபையில் 222 உறுப்பினர்கள் உள்ளனர். இருப்பினும் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் 6 பேர் பெலோசிக்கு வாக்களிக்கவில்லை. ஆனால், 209 உறுப்பினர்களைக் கொண்ட குடியரசுக் கட்சியின் வாக்குகள் அனைத்தும் கெவின் மெக்கார்த்திக்கு கிடைத்தன.
இந்த வெற்றியின் மூலம் பிரதிநிதிகள் சபை தலைவராக நான்சி பெலோசி நான்காவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, மற்ற உறுப்பினர்களுக்கு அவர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
2006-இல் பிரதிநிதிகள் சபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் அப்பதவியை வகித்த முதல் பெண் என்கிற பெருமையைப் பெற்றார்
நான்சி பெலோசி. 2006 முதல் 2011 வரை சபையை வழிநடத்திய அவர், 2018ஆம் ஆண்டு முதல் மீண்டும் பிரதிநிதிகள் சபை தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.