அமெரிக்க வரலாற்றில் அடுத்த அத்தியாயத்தை எழுதுவோம்! – ஜனாதிபதியாகப் பதவியேற்று பைடன் சூளுரை!

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ளார்.
இந்தப் பதவியேற்ப நிகழ்வு வொஷிங்டன், கபிட்டல் நகரில் உள்ள நாடாளுமன்ற வளாக முன்றலில் நடைபெற்றது.
இதன்போது, துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் தனது உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டதுடன் துணை ஜனாதிபதியான முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இந்த விழாவில், முன்னாள் ஜனாதிபதிகளான பராக் ஒபாமா, ஜோர்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் பில் கிளிண்டன் ஆகியோர் கலந்துகொண்டதுடன் முன்னாள் துணை ஜனாதபதி மைக் பென்ஸ் கலந்துகொண்டார்.
இந்நிலையில், பதவியேற்ற பின்னர் உரை நிகழ்த்தியுள்ள ஜோ பைடன், ‘பதவியேற்பு நாள் அமெரிக்க ஜனநாயகத்தின் நாள்’ எனத் தெரிவித்துள்ளார்.
அவர் உரையாற்றுகையில், “ஜனநாயகம் விலை மதிப்பற்றது. இரு கட்சிகளையும் சேர்ந்த அமெரிக்க முன்னாள் அதிபர்கள் அனைவருக்கும் நன்றி!
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்! அத்துடன், துணை ஜனாதிபதியான கமலா ஹரிசுக்கும் எனது வாழ்த்துக்கள்!
அமெரிக்காவில் பல சோதனைகளைக் கடந்து மக்களாட்சி வென்றுள்ளது. தொலைதூரம் கடந்து வந்துள்ளோம், இன்னும் தூரம் செல்ல வேண்டும்.
இன்னும் நிறைய காயங்களை ஆற்ற வேண்டியுள்ளதுடன் இன்னும் சீரமைக்கவும் வேண்டியுள்ளது. ஒவ்வொரு அமெரிக்கர்களும் இணைந்து செயற்பட வேண்டிய தருணம் இதுவாகும்.
கொரோனாவால் பல உயிர்கள் பறிபோயுள்ளன. கொரோனா கொடுந்தொற்றை வென்று மீள்வோம்.
அதேபோல், ஜனநாயக வன்முறையை முறியடித்துள்ளோம். இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று, வன்முறைகள் போன்றவற்றை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
நாட்டை ஒன்றிணைக்க மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். ஒற்றுமை இல்லாமல் வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது.
இதேவேளை, பயங்கரவாதம் மற்றும் நிறவெறியை முடிவுக்குக் கொண்டு வருவதுடன் அமெரிக்காவின் அனைத்து மக்களும் அனைத்து வேற்றுமைகளையும் கடந்து ஒன்றுபட வேண்டும்.
அனைவரும் ஒன்று பட்டால் வளமான, நலமான வாழ்வுக்கு வழி காண முடியும். நாம் அனைவரும் ஒன்றுபட்டு நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவோம்.
அத்துடன், ஒட்டு மொத்த அமெரிக்கர்களுக்கான ஜனாதிபதியான நான் செயற்படுவேன். உலகமே அமெரிக்காவை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க வரலாற்றில் அடுத்த அத்தியாயத்தை எழுதுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்தப் பதவியேற்பு நிகழ்வில், லேடி ககா (Lady Gaga) என்பவர் அமெரிக்க தேசிய கீதத்தைப் பாடியதுடன், அவருடன் இணைந்து ஜெனிபர் லோபஸ் மற்றும் கார்த் ப்ரூக்ஸ் ஆகியோர் பாடியுள்ளனர்.
இதேவேளை, முதல் தேசிய இளம் கவிஞர் விருது பெற்ற 22 வயதான அமண்டா கோர்மன் (Amanda Gorman) ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கவிதை வாசித்த இளைய கவிஞரானார்.
இம்மாதத் தொடக்கத்தில் கபிட்டலில் நடந்த பயங்கர கலவரத்தையடுத்து இன்றைய பதவியேற்பு விழாவுக்காக குறித்த பகுதியில் சுமார் 25 ஆயிரம் பாதுகாப்புத் தரப்பினர் அடங்கிய ஏழு அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.