அரசாங்கத்துக்கு நோகாமல் எப்படி போராடலாம் என்று சிந்திக்கும் தமிழ் அரசியல்வாதிகள்- ராஜபக்ஷக்களின் அசுர பலத்தை முறியடிக்க வழிகள் உண்டு!
November 29, 2020 10:19 pm GMT

ஆண்டுத் துவசத்தை வீடுகளில் ஆண்டு தோறும் கொண்டாடும் இந்துக்கள் அதை படம் பிடித்து முகநூலில் போடுவது உண்டு. ஆனால், அது தனிப்பட்ட ஒரு வீட்டு நிகழ்வை தனிப்பட்ட முறையில் ஒரு பொது வெளியில் நண்பர்கள் மத்தியில் பகிர்வது.
அதுபோலவே, அனைத்து மரித்தோர் தினத்தை கொண்டாடும் கிறிஸ்தவர்களும் தேவாலயங்களில் பாண் அல்லது பணிசை தானம் செய்துவிட்டு அதைப் படம் பிடித்து போடுவதுண்டு. தவிர ஆடி அமாவாசை, சித்ரா பௌர்ணமி நாட்களில் வீட்டில் விரதம் அனுஷ்டிப்பவர்கள் அதைப் படம் பிடித்து தனிப்பட்ட முறையில் பகிர்வதுண்டு. இன்று விரதச் சாப்பாடு சாப்பிட்டோம் என்று படம் போடுபவர்கள் உண்டு.
இவை யாவும் தனிநபர்கள் தங்களுடைய தனிப்பட்ட நிகழ்வுகளை பொது வெளியில் பகிர்வது. ஆனால், கூட்டுத் துக்கத்தை வீட்டுக்குள் முடக்கும் நோக்கத்தோடு அரசாங்கம் நினைவு கூர்தலுக்கு சட்டத் தடையை ஏற்படுத்திய பின்னர் தமிழ் அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள்?
தமிழ் அரசியல்வாதிகள் தங்களுடைய வீடுகளிலும் அலுவலகங்களிலும் விளக்குகளை ஏற்றி விட்டு அதைத் தமது தொண்டர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களோடு நின்று படம் எடுத்துவிட்டு அப்படங்களை முகநூலில் பகிர்ந்திருக்கிறார்கள்.
நீதிமன்றத்தின் தடை உத்தரவை ஏற்று பொது வெளியில் செய்யாத ஒன்றை தனிநபர் வெளியில் செய்துவிட்டு அந்தப் படங்களை பொது வெளியில் பகிர்ந்திருக்கிறார்கள். இதை எப்படி விளங்கிக் கொள்வது?
தாங்கள் மாவீரர் தினத்தை அனுஷ்டித்தோம் என்பதனை அவர்கள் இப்படங்களின் மூலம் பகிரங்கப்படுத்துகிறார்கள். அப்படிப் பகிரங்கப்படுத்த வேண்டிய தேவை ஏன் வந்தது? ஏனெனில், நீதிமன்றம் அதை தடை செய்திருக்கிறது. எனினும், நாங்கள் மாவீரர் நாளை அனுஷ்டித்தோம் என்று காட்டப் பார்க்கிறார்கள்.
இம்முறை, துயிலுமில்லங்களுக்குப் போகமுடியாத மாவீரர் குடும்பங்கள் அல்லது போராட்டத்திற்கு ஆதரவான தரப்புக்கள் அதைச் செய்வது வேறு. அதையே மக்கள் பிரதிநிதிகளும் அரசியல்வாதிகளும் செய்வதை எப்படி விளங்கிக் கொள்வது?
அந்தப் படங்கள் தமிழ் அரசியல்வாதிகளின் இயலாமையை வெளிக்காட்டவில்லையா? ஈழத் தமிழ் அரசியலின் இயலாமையை வெளிக்காட்டவில்லையா? அவரவர் தங்களுடைய வீடுகளில் தனிப்பட்ட முறையில் விளக்கு ஏற்றுவதற்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. வடமராட்சி போன்ற சில இடங்களில் வெளி மதிலில் விளக்கேற்றிய சிலரை படைத் தரப்பு அச்சுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரம் நட முயன்ற மக்களையும் படைத்தரப்பு தடுக்க முற்பட்டதாகச் செய்திகள் உண்டு. யாழ். நகரப் பகுதியில் அன்று வெள்ளிக்கிழமை என்பதால் வழமைபோல திருஷ்டி கழித்து கடை வாசலில் பொருட்களை போட்டு எரிக்கும் வழமையை இம்முறை பொலிஸார் தடை செய்திருக்கிறார்கள். எனினும், ஆங்காங்கே சில வீடுகளில் வெளி முற்றத்தில் விளக்கேற்றப்பட்டது.
பெரும்பாலும் வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் உள்ளேயே விளக்குகள் ஏற்றப்பட்டன. ஆனால், பொதுவாக வெளி மதில்களில் விளக்கேற்றியவர்கள் தொகை மிகக் குறைவு. பொது வெளியில் பொதுச் சுடர் ஏற்றிய சந்தர்ப்பங்களும் குறைவு. நீதிமன்றங்களின் தீர்ப்பும் பொலிஸ் மற்றும் படைத் தரப்பின் அதிகரித்த பிரசன்னமும் மக்களை இம்முறை அதிகம் அச்சுறுத்திவிட்டன. எனவே தொகுத்துப் பார்த்தால் இம்முறை மாவீரர் நாள் நமக்குத் தரும் செய்தி என்ன?
தமிழ் அரசியலின் இயலாமைதான். நினைவு கூர்வதற்கான உரிமை எனப்படுவது ஒரு கூட்டு உரிமை. ஒரு அரசியல் உரிமை. ஒரு பண்பாட்டு உரிமை. அரசாங்கம் அதை நீதிமன்றங்களின் மூலம் தடைசெய்கிறது. அந்தத் தடைக்கு எதிராக போராடத் திராணியற்ற அரசியல்வாதிகள் ஒன்றில் நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தினார்கள் அல்லது அலுவலகங்களில் அல்லது வீடுகளில் விளக்குகளை ஏற்றினார்கள்.
அதற்கும் அப்பால் அவர்களால் போராட முடியவில்லை. நினைவுகூரும் ஒரு கூட்டு உரிமைக்காகப் போராட முடியாத இந்த அரசியல்வாதிகள் ஏனைய கூட்டு உரிமைகளுக்காகவும் போராடுவார்கள் என்று எப்படி நம்புவது?
ஆம்! அவர்கள் போராட மாட்டார்கள். நாடாளுமன்றத்தில் ஆவேசமான உரைகளை நிகழ்த்துவார்கள். அதற்கும் அப்பால் வழக்குப் போடுவார்கள். தமிழ் அரசியல்வாதிகளில் கணிசமானவர்கள் வழக்கறிஞர்கள் என்பதனால் அதைத்தான் அவர்கள் செய்வார்கள். அவர்களுக்கு தெரிந்த ஒரேயொரு ஒழுக்கம் அதுதான். அதற்கும் அப்பால் போராட அவர்களுக்குத் தெரியாது.
முடிந்தால் யாழ். நகரப் பகுதியில் அல்லது ஏனைய மக்கள் கூடும் இடங்களில் சில மணிநேர கவனயீர்ப்பு போராட்டத்தைச் செய்வார்கள். அல்லது பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்தால் அதில் போய் முன்னுக்கு நிற்பார்கள்.
அதற்கும் அப்பால் தாங்களாக ஒரு போராட்டத்தை ஒழுங்குபடுத்தவும் அதற்குத் தலைமை தாங்கவும் தொடர்ச்சியாக அதை முன்னெடுக்கவும் அவர்களால் முடியாது என்பதைத்தான் கடந்த பத்தாண்டுகள் நிரூபித்திருக்கின்றன.
இந்தப் பத்தாண்டு கால அனுபவத்தின் அடிப்படையில்தான் ராஜபக்ஷக்கள் துணிச்சலாக தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் எதிராகத் தமது பிடியை இறுக்குகிறார்கள். அவர்களுக்குத் தெரியும் தமிழ் பிரதிநிதிகள் போராட மாட்டார்கள் அல்லது அவர்களால் போராட முடியாது என்று. அவர்களுக்கு தெரியும் முஸ்லிம் பிரதிநிதிகள் பொறுத்த நேரத்தில் குத்துக்கரணம் அடிப்பார்கள் என்று.
எனவே, இந்த இரண்டு சிறிய தேசிய இனங்களினதும் அரசியல்வாதிகளின் இயலாமையை, கையாலாகாத்தனத்தை, கோழைத்தனத்தை அவர்கள் நன்கு விளங்கிக்கொண்டு விட்டார்கள். அவர்கள் தொடர்ந்தும் தமது பிடியை இறுக்குவார்கள்.
சிங்கள, பௌத்த மயமாக்கலை சாத்தியமான எல்லா வடிவங்களில் முன்னெடுப்பார்கள். அரசின் உபகரணங்கள் ஆகிய திணைக்களங்களுக்கூடாக அதைத் தீவிரமாக முன்னெடுப்பார்கள். அபிவிருத்தி மைய இனப்படுகொலை ஒன்றை அவர்கள் இனித் தடையின்றி முன்னெடுக்கலாம். அதன்மூலம் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் இன விகிதாசாரத்தை விரும்பியபடி மாற்ற முயற்சிப்பார்கள்.
அதை எதிர்கொள்வதற்கு தமிழ் தரப்பு தயாராக இல்லை என்பதையே நடந்துமுடிந்த நினைவு கூர்தல்கள் நிரூபித்திருக்கின்றன. கடந்த பத்தாண்டு காலம் நிரூபித்திருக்கிறது. தமது எதிர்ப்பை கூர்மையான விதங்களில் வெளிப்படுத்த தமிழ் தரப்பால் முடியாதுள்ளது. அரசாங்கத்துக்கு நோகாமல் எப்படி போராடலாம் என்றுதான் பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகள் யோசிக்கிறார்கள்.
நாடாளுமன்ற உரைகளுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. ஆனால், நாடாளுமன்ற உரைகள் மட்டும் போராடப் போவதில்லை. ஏற்கெனவே, மணித்தியாலக் கணக்கில் முன்னாள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆற்றிய உரைகள் எம்மிடம் உண்டு. அந்த உரைகள் ஹன்சார்ட்டில் அச்சிடப்பட்டன, பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக வந்தன. அற்கும் அப்பால் அவை தமிழ் மக்களுக்கு எதைப் பெற்றுக் கொடுத்தன?
இன்னும் எவ்வளவு காலத்திற்கு இப்படி உரைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கப் போகிறோம்? 2009இற்குப் பின்னர் மறுபடியும் நாடாளுமன்ற உரைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு மீட்சியை பெற்றுக் கொடுக்கலாம் என்று யாரும் நம்பத் தயாரில்லை.
எனவே தமிழ் கட்சிகள் இது விடயத்தில் திட்டவட்டமான சில முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். முதலாவது முடிவு,
தமிழ் தரப்பு அணிதிரள வேண்டும். அதற்குப் பொருத்தமான ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அதற்குத் தேவையான ஒரு பொதுக்கொள்கை வரைபை உருவாக்க வேண்டும்.
இரண்டாவது முடிவு, விவகாரங்களையும் சவால்களையும் கையாள்வதற்கு நிபுணர்கள் அடங்கிய குழுக்களை உருவாக்குவது. அதாவது, தமிழ் அரசியலை ஆகக்கூடியபட்சம் அறிவியல் மயப்படுத்துவது. அந்த நிபுணத்துவ ஆலோசனையோடுதான் அரசியல்வாதிகள் முடிவுகளை எடுக்கலாம்.
மூன்றாவது முடிவு, போரின் விளைவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்குப் பொருத்தமான பொருளாதாரத் திட்டங்களை முன்வைத்து அதை எப்படி அமுல்படுத்தலாம் என்று சிந்திப்பது.
நாலாவது முடிவு, தாயகத்தையும் தமிழகத்தையும் இதில் எப்படிக் கூட்டுச்சேர்க்கலாம் என்று சிந்திப்பது. அதற்கு வேண்டிய புதிய பொறிமுறை ஒன்றை உருவாக்குவது.
இப்போதுள்ள நிலைமைகளின்படி தாயகத்துக்கும் டயஸ்போராவிற்கும் இடையில் இடையூடாட்டப் பொதுக் கட்டமைப்பு எதுவும் கிடையாது. டயஸ்போராவில் இருப்பவர்கள் தமது அரசியல் அபிலாசைகளை தீவிரமாக வெளிப்படுத்துவார்கள். ஆனால், அதே அளவு தீவிரத்தோடு தாயகத்தில் இருப்பவர்கள் தமது உணர்வுகளை வெளிக்காட்ட முடியாது.
இதனால், டயஸ்போராவில் தீவிர நிலைப்பாடு எடுப்பவர்களும் தாயகத்தில் அரசியல் செய்பவர்களும் ஒன்றாக இணைவதில் அடிப்படையான வரையறைகள் உண்டு. இந்த வரையறைகளை விளங்கிக்கொண்டு தாயகம் – டயஸ்போரா – தமிழகம் ஆகிய மூன்று பரப்புகளையும் ஒருங்கிணைக்கும் பொருத்தமான ஒரு பொதுக் கட்டமைப்பையும் பொறிமுறையையும் உருவாக்க வேண்டும்.
இல்லையென்றால் தமிழ் அரசியல் நீர்த்துப் போகும் ஆபத்து உண்டு. தமிழ் இளையோர் அரசியல் நீக்கம் செய்யப்படும் ஆபத்தும் அதிகரிக்கும். ராஜபக்ஷக்களின் அசுர பலத்துக்கு முன்னால் முகநூலில் விளக்கேற்றும் அரசியல் நின்று பிடிக்குமா?

-
உலக நாடுகளிலும் நொதிக்கத் தொடங்கிய தமிழர் உணர்வுப் போராட்டம்: இடைநடுவில் விட்டுவிடலாமா??
யாழ். பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவா...
-
ஓராண்டு ஆட்சி அறுவடை செய்யப்போவது என்ன?- ராஜபக்ஷக்களுக்கு வரப்பிரசாதமாகும் ஜெனீவா கூட்டத்தொடர்.!
“ஜனாதிபதியால் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட சில அபிவிருத...