அரசியல் கட்சி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் – ரஜினி
In இந்தியா November 30, 2020 9:11 am GMT 0 Comments 2313 by : Dhackshala

அரசியல் கட்சி தொடர்பாக விரைவில் முடிவு எடுத்து அறிவிக்கவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா? தொடங்க மாட்டாரா? என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீடித்த நிலையில், மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்தினார்.
கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் நிலவரம் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதன்போது கட்சி தொடங்கலாமா? கட்சி தொடங்கும் சூழல் உள்ளதா? என்பது குறித்து நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் கேட்டறிந்தார்.
நிர்வாகிகள் தங்கள் பகுதி நிலவரங்கள் மற்றும் தங்களின் கருத்துக்களை ரஜினியுடன் பகிர்ந்துகொண்டனர். முதல்வர் வேட்பாளராக ரஜினிகாந்த் போட்டியிட வேண்டும் என்ற கருத்தையும் பலர் முன்வைத்துள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் ரஜினிகாந்த், ரசிகர்களை நோக்கி கையசைத்தும் வணங்கியும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், விரைவில் நல்ல முடிவெடுத்து அறிவிப்பதாக கூறினார்.
என்ன முடிவு எடுத்தாலும் ஆதரவு அளிப்பதாக மாவட்ட செயலாளர்கள் உறுதி அளித்திருப்பதாகவும் ரஜினிகாந்த் இதன்போது குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.