அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்!- அரசாங்கத்தை வலியுறுத்தும் லெனினிசக்கட்சி
In இலங்கை January 1, 2021 3:58 am GMT 0 Comments 1285 by : Yuganthini

அனைத்து அரசியல்கைதிகளையும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக்கட்சியின் வன்னி மாவட்டச் செயலாளர் என்.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக மாக்சிச லெனினிசக்கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக அறிக்கையில் என்.பிரதீபன் மேலும் கூறியுள்ளதாவது, “அரசியல் கைதிகள் மீதான வழக்குகள் யுத்தம் முடிவுற்று பதினொரு வருடங்கள் கடந்தும் விசாரணை செய்யப்படாமல் இருந்து வருகிறது. இது அப்பட்டமான நீதிமறுப்புச் செயற்பாடாகும்.
காலம்தாழ்த்தி வழங்கப்படும் நீதி – நீதி மறுப்புக்குச் சமனாகும் என்பதை அரசு கவனத்தில் கொள்ளல் வேண்டும் எனவும் அனைத்து அரசியல் கைதிகளையும் எதுவித நிபந்தனையும் இன்றி பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யுமாறும் கோருகின்றோம்.
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் சனிக்கிழமை காலை 10மணியளவில் வவுனியா பொதுவைத்தியசாலை சுற்றுவட்டத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.
அரசியல் கைதிகளின் விடுவிப்பில் அக்கறையுள்ள அனைத்து தரப்பினரையும் கலந்து கவனயீர்ப்பை வலுவூட்டூமாறு கட்சி கேட்டு நிற்கின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.