அரசிற்கு பாதாள உலகக் குழுவை அழிக்கத் துணிவில்லை: ஞானசார தேரர்!
In இலங்கை March 24, 2018 3:02 am GMT 0 Comments 1701 by : Ravivarman

விடுதலைப் புலிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாத்த அரசாங்கத்திற்கு பாதாள உலகக் குழுவினரை அழிக்க முடியாதுள்ளமை வேடிக்கையாகவுள்ளதாக பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
அண்மைக் காலமாகத் தொடரும் பாதாள உலகக் குழுவினரின் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘புலிகளின் விவகாரத்தில் அரசாங்கம் கையாண்ட நடவடிக்கைகளை பாதாள உலகக் குழுவினர் மீது செயற்படுத்த அரசாங்கம் பின்வாங்குவது வேடிக்கையாகவுள்ளது. பாதாள உலகக் குழுவினரின் செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.
இதற்கு தேசிய அரசாங்கத்தினை மாத்திரம் குறைகூற முடியாது. கடந்த கால அரசாங்கமும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும். பாதாள உலகக் குழுவினை அரசியல்வாதிகளே உருவாக்கினர். தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இவர்களை ஆயுதமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.
எனினும் குறித்த பாதாள குழுவின் பின்னணியில் எந்த அரசியல்வாதிகள் உள்ளார்கள் என்பதை நன்கு அறிந்தும் சட்டம் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பின்வாங்குகின்றது.
பாதாள குழுவினரின் விடயத்தில் கடந்த கால அரசாங்கம் போலவே நல்லாட்சி அரசாங்கமும் பொறுப்பற்ற விதத்திலேயே செயற்படுகின்றது’ என ஞானசார தேரர் மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.