தாய்லாந்து அரச குடும்பத்தினருக்கும் பட்டமளிப்பு

தாய்லாந்தின் புதின மன்னராக மஹா வஜிரலோங்கோர்ன் முடிசூட்டப்பட்டுள்ள நிலையில், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பட்டம் சூட்டப்படவுள்ளது. மன்னர் தமது கரங்களால் பட்டங்களை சூட்டவுள்ளார்.
அத்தோடு, தலைநகர் பாங்கொக்கில் இடம்பெறவுள்ள அரச நிகழ்ச்சிகளில் மன்னர் கலந்துகொள்ளவுள்ளார்.
தாய்லாந்தை சுமார் 70 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த மன்னர் பூமிபோல் அடுல்யதேஜ், கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபரில் காலமானார்.
அதனை தொடர்ந்து அவரது மகன் மஹா வஜிரலோங்கோர்ன் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டார். இவரின் முடிசூட்டு விழா, தாய்லாந்து முறைப்படி நேற்றைய தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
புதிய மன்னரின் முடிசூட்டு விழா, மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது. நேற்று காலை, பௌத்த மற்றும் இந்து பிராமண முறைப்படி பாரம்பரிய நடைமுறைகள் ஆரம்பமாகின.
மன்னருக்கே உரிய உடை அணிந்தபடி ஏழு வெண்குடைகள் சேர்ந்த அரியாசனத்தில் அமரவைக்கப்பட்ட மன்னருக்கு ராஜ கிரீடம், அரச பாதணிகள், விசிறி, ராஜ வாள் மற்றும் செங்கோல் போன்ற ஐந்து அரசுரிமை சின்னங்கள் வழங்கப்பட்டன.
இறுதியில் கிரீடம் அணிவிக்கப்பட்டு, மன்னராக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், அதிகாரிகள் முன்னிலையில் பதவியேற்பு பிரமாணத்தை வாசித்தார்.
இந்தநிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் இடம்பெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதோடு, அரச குடும்பத்தினருக்கு பட்டங்களை சூட்டிவைப்பார்.
இந்த விழாவில் நாடு முழுவதிலும் இருந்து பல இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.