அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்டோருக்கு பிணை!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கில் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட 8 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மனு இன்று (வெள்ளிக்கிழமை) நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கு சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் 10ஆவது பிரதிவாதியான அஜகான் கார்திய புஞ்சிஹேவா ஆகியோர் இன்று மன்றில் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பாக சட்டத்தரணிகளும் ஆஜராகவில்லை.
நீதிமன்றில் ஆஜரான ஏனைய 8 பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அவர்களை 10 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
அதேநேரம் பிரதிவாதிகளுக்கு வௌிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டதுடன், அவர்களின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களத்தால் பிரதம நீதியரசரிடம் அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் அதற்கு பிரதம நீதியரசர் அனுமதி வழங்கினார்.
இதனையடுத்து மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனம் உட்பட 10 பிரதிவாதிகளுக்கு எதிராக நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.