அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் கோரிக்கை நிலுவையில் – சட்டமா அதிபர்
In ஆசிரியர் தெரிவு December 5, 2020 4:15 am GMT 0 Comments 1436 by : Jeyachandran Vithushan

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்துடன் தொடர்புடைய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் கோரிக்கை நிலுவையில் உள்ளதாக சட்டமா அதிபர் சிங்கப்பூர் நீதி அமைச்சின் செயலாளருக்கு தெரிவித்துள்ளார்.
சட்ட மா அதிபர் தப்புல டி லிவேராவினால் குறித்த தெளிவுபடுத்தல் அறிக்கை நேற்று (வெள்ளிக்கிழமை) சிங்கப்பூர் நீதி அமைச்சின் செயலாளருக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பிணை முறிமோசடி விவகாரத்துடன் தொடர்புடைய, அர்ஜுன மகேந்திரன் மீதான ஒப்படைப்பு கோரிக்கை தொடர்ந்தும் நிலுவையில் உள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும், அர்ஜூன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பிலான அறிக்கையினை தம்மிடம் நீதி அமைச்சர் அலி சப்ரி கோரியுள்ளதாக சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைது செய்யுமாறு உயர் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமைய, அவரை ஒப்படைக்குமாறு சிங்கப்பூர் நீதி அமைச்சுக்கு சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கமைய, தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்கள் கிடைக்கப்பெற்றவுடன், குறித்த கோரிக்கையை அரசு பரிசீலிக்குமென சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.