அவுஸ்ரேலியவை 137 ஓட்டங்களால் வீழ்த்தி வெற்றிவாகை சூடியது இந்தியா!
In கிாிக்கட் December 30, 2018 3:34 am GMT 0 Comments 1328 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி 137 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
மெல்பேர்ன் மைதானத்தில் கடந்த 26ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸிற்காக 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 443 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக புஜாரா 106 ஓட்டங்களையும், விராட் கோஹ்லி 82 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா ஆட்டமிழக்காது 63 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் பெட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டாக் 2 விக்கெட்டுகளையும், ஜோஸ் ஹசில்வுட் மற்றும் நதன் லியோன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைதொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலியா அணி, 151 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக டிம் பெய்ன் மற்றும் மார்க்கஸ் ஹரிஸ் ஆகியோர் தலா 22 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் பும்ரா 6 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனைதொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ஓட்டங்களை பெற்றிருந்த போது தனது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
இதற்கமைய அவுஸ்ரேலியா அணிக்கு 399 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 399 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, 261 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது.
இந்தியா அணி சார்பில், ஜஸ்ரிட் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெட்களையும், இஷாந்த் சர்மா மற்றும் மொஹமட் ஷமி ஆகியோர் தல இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக இரு இன்னிங்ஸிலும் சிறப்பாக பந்து வீசிய ஜஸ்பிரிட் பும்ரா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.