அவுஸ்ரேலியாவில் சூறாவளி: சுமார் 25,000 வீடுகளில் மின்விநியோகம் பாதிப்பு
In அவுஸ்ரேலியா March 18, 2018 4:28 am GMT 0 Comments 1788 by : Suganthini
அவுஸ்ரேலியாவின் வட பிராந்தியமான டார்வின் (Darwin) பிராந்தியத்தைத் தாக்கிய பாரிய சூறாவளியைத் தொடர்ந்து, அப்பிராந்தியத்தில் சுமார் 25 ஆயிரம் வீடுகளில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி பிராந்தியத்தில் அடை மழை பெய்துவந்த நிலையில், மணிக்கு 130 கிலோமீற்றர் வேகத்தில் மார்கஸ் (Marcus) சூறாவளி நேற்று (சனிக்கிழமை) தாக்கியது. இதனைத் தொடர்ந்து, வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தமையால், மின்கம்பிகளும் அறுந்துள்ளன. இந்நிலையில், டார்வின் பிராந்தியத்திலுள்ள சுமார் 25 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கிக் காணப்படுகின்றன.
அத்துடன், இந்த சூறாவளியைத் தொடர்ந்து விமானப் போக்குவரத்துகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், கப்பல் போக்குவரத்துகளிலும் தாமதம் காணப்படுவதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.
டார்வின் பிராந்தியத்திலுள்ள பாடசாலைகளை நாளை (திங்கட்கிழமை) மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அப்பிராந்திய ஆளுநர் கூறியுள்ளார்.
மேலும், கொதித்தாறிய நீரைப் பருகுமாறும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.