அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் – தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் கொரோனா விதிமுறைகள்!

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்கள், நிர்வாகத்தினருக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக மெல்போர்ன் நகருக்கு வந்திறங்கிய தனி விமானங்களில் பயணித்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானப் பணியாளர், தொலைக்காட்சி குழுவைச் சோ்ந்தவர், பயிற்சியாளார்கள் இருவர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.
இவர்களில் மூவர் லொஸ் ஏஞ்சல்ஸில் இருந்தும், ஒருவர் அபு தாபியில் இருந்தும் மெல்போர்ன் நகருக்கு வந்த தனி விமானங்களில் பயணித்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக குறித்த நால்வருக்கும் விமானம் ஏறும் முன்பாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவா்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்றே முடிவுகள் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது போட்டியாளா்களுக்கும் தொற்று பாதிப்பு பரவாமல் தடுக்கும் வகையில் முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்கள் உள்ளிட்ட அனைவருக்குமே கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிப்பது அல்லது பொலிஸாரின் கண்காணிப்புடன் கூடிய மிகப் பாதுகாப்பான தனிமைப்படுத்துதலுக்கு உள்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளை போட்டி நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.