அ.தி.மு.க ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது: ஓ.பன்னீர்செல்வம்
In இந்தியா May 4, 2019 3:16 am GMT 0 Comments 2275 by : Yuganthini

மக்களின் தேவைகளை அறிந்து செயற்படும் அ.தி.மு.க ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாதென ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இருகூர் சுங்கம் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஓ.பன்னீர்செல்வம் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“அ.தி.மு.க ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் தி.மு.க, அ.ம.மு.க உள்ளிட்ட பல கட்சிகள் செயற்பட்டு வருகின்றன. ஆனால் அக்கட்சிகளின் கனவு ஒருபோதும் பலிக்கபோவதில்லை.
இதேவேளை மக்களின் நலன் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ள கட்சிகளுடனே நாம் கூட்டணி அமைத்துள்ளோம்.
மேலும் எமது ஆட்சியில் கல்வி, பொருளாதாதரம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாக தமிழகம் தற்போது திகழ்கின்றது.
சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க திகழ்வதுடன் இன மோதல்கள் ஏதும் இடம்பெறவில்லை.
ஆனால், தி.மு.க ஆட்சியில் தொடர் மின்வெட்டு காரணமாக தொழில் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகளவில் நடைபெற்றன. இவ்வாறு தி.மு.க ஆட்சியில் மக்கள் துன்பங்களையே அதிகளவில் அனுபவித்தனர்.
ஆகையால் எமது கட்சிக்கே மக்கள், தங்களது ஆதரவினை வழங்குவார்கள்” என ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.