ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்: இந்திய அணி அபார வெற்றி
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின், சுப்பர்- 4 சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது.
டுபாயில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 237 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் பாகிஸ்தான் அணி சார்பில், அணியின் அதிகபட்ச ஓட்டமாக சொயிப் மலிக் 78 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் பும்ரா, சஹால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து, 238 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி, 39.3 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை மட்டும் இழந்து வெற்றி இலக்கை கடந்தது. இதன்படி இந்திய அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றியை பதிவுசெய்தது.
இதில் இந்திய அணி சார்பில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ஷிகர் தவான் 114 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா 111 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்த வெற்றியின் மூலம், இந்தியா அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ஷிகர் தவான் தெரிவுசெய்யப்பட்டார்.
இப்போட்டியில் 15ஆவது சதத்தை பூர்த்திசெய்த தவானும், 19ஆவது சதத்தை பூர்த்திசெய்த ரோஹித் சர்மாவும் புதிய பெருமையை பெற்றுள்ளனர்.
தவான் – ரோஹித் ஜோடி சதம் விளாசியமையானது, பாகிஸ்தான் அணிக்கெதிராக, ஒரே போட்டியில் இந்திய அணி சார்பில் இரு வீரர்கள் சதங்கள் பெற்ற மூன்றாவது சந்தர்ப்பமாகவும் இது பதியப்பட்டுள்ளது.
மேலும், ரோஹித் சர்மா குறைந்த இன்னிங்சுகளில் 19 சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில், 4ஆவது வீரராகவுள்ளார்.
இதுதவிர ரோஹித் சர்மா நேற்றைய போட்டியில் ஒருநாள் போட்டிகளில் 7000 ஓட்டங்களையும் கடந்த 9ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
பாகிஸ்தான் அணிக்கெதிராக, மிக அதிகமான பந்துகள் மீதம் வைத்து, இந்தியா அணி பெற்றுக்கொண்ட மிகப்பெரிய வெற்றியாக இந்த வெற்றி பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த 2006ஆம் ஆண்டு முல்தானில் 105 பந்துகள் மீதம் வைத்து பெற்றுக்கொண்ட வெற்றியே பாகிஸ்தான் அணிக்கெதிராக, மிக அதிகமான பந்துகள் மீதம் வைத்து, இந்திய அணி பெற்றுக்கொண்ட மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.
தற்போது நேற்றைய போட்டியில் 126 பந்துகள் மீதம் வைத்து கடந்த கால சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.