ஆசிய தடகள போட்டி – சாதித்த இந்திய வீரர்கள் : சித்ராவுக்கு தங்கம்
In விளையாட்டு April 25, 2019 6:53 am GMT 0 Comments 2026 by : adminsrilanka
ஆசிய தடகள போட்டியின் இறுதி நாளில் இந்திய வீராங்கனை சித்ரா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கட்டார் நாட்டின் தலைநகர் தோஹாவில் கடந்த 21-ஆம் திகதி தொடங்கம் இடம்பெற்று வந்தது. இதில் கடைசி நாளான நேற்று இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டியது.
பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பி.யூ.சித்ரா 4 நிமிடம் 14.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். 2, 3-வது இடங்களை பக்ரைன் வீராங்கனைகள் பிடித்தனர்.
கேரளாவைச் சேர்ந்த 23 வயதான சித்ரா ஏற்கனவே 2017-ம் ஆண்டு போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார். இதன் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் அஜய் குமார் சரோஜ் வெள்ளிப்பதக்கத்தை 3 நிமிடம் 43.18 வினாடிகளில் இலக்கை அடைந்து கைப்பற்றினார்.
பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசாவைச் சேர்ந்த டுட்டீ சந்த் 23.24 வினாடிகளில் 3-வதாக அடைந்து வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டம் இரண்டிலும் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இதில் ஆண்கள் அணியில் இடம்பெற்ற 4 பேரில் தமிழக வீரர் ஆரோக்ய ராஜீவும் ஒருவர்.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த 4 x 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் முகமது அனாஸ், பூவம்மா, விஸ்மயா, ஆரோக்ய ராஜீவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3 நிமிடம் 16.47 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப்பதக்கத்தை பெற்றது.
பதக்கம் வென்ற ஆரோக்ய ராஜீவ் திருச்சியை சேர்ந்தவர். ராணுவத்தில் பணியாற்றும் அவருக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். வெள்ளிப்பதக்கம் வென்று தேசத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த ஆரோக்ய ராஜீவ் மேலும் பல சாதனைகளை படைத்திட வேண்டும் என்று வாழ்த்து செய்தியில் முதல்-அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
4 நாள் நடந்த போட்டியின் நிறைவில் இந்தியா 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என்று மொத்தம் 18 பதக்கங்களை குவித்து பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.