18 வயதுக்குட்பட்ட ஆசிய பெண்களுக்கான ரக்பி சம்பியன்ஷிப்: சீனா சம்பியன்
In விளையாட்டு October 30, 2018 6:09 am GMT 0 Comments 1311 by : Anojkiyan
18 வயதுக்குட்பட்ட ஆசிய பெண்களுக்கான ரக்பி சம்பியன்ஷிப் பட்டத்தை, சீனா பெண்கள் ரக்பி அணி கைப்பற்றியுள்ளது.
நேற்று முன் தினம் கலிங்கா விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆசிய 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ரக்பி சம்பியன்ஷிப் தொடரின், இறுதிப் போட்டியில் சீனா அணியும், ஹொங்கொங் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இரசிகர்கள் புடை சூழ, உற்சாக கரகோஷத்திற்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், இரு நாட்டு வீராங்கனைகளும் களத்தில் முட்டி மோதிக் கொண்டனர்.
ஆரம்பம் முதலே சீன வீராங்கனைகள் களத்தில் ஆக்ரோஷமாக செயற்பட்டனர். இதற்கமைய அவர்கள் தொடர்ச்சியான புள்ளிகளை குவித்தனர்.
ஆனால், சீன வீராங்கனைகளின் ஆக்ரோஷத்திற்கு ஹொங்கொங் வீராங்கனைகளால், ஈடு கொடுக்க முடியாமல் போனது.
இதனால் ஹொங்கொங் வீராங்கனைகள் களத்தில் திகைத்து நின்றனர். மறுபுறம் சிறப்பாக செயற்பட்ட சீன வீராங்கனைகள் புள்ளிகளை குவித்தனர்.
போட்டியின் இறுதியில் 28-5 என்ற புள்ளிகள் அடிப்படையில், ஹொங்கொங் அணியை வீழ்த்தி, சீனா பெண்கள் அணி அபார வெற்றிபெற்று, சம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தியது.
சீன அணிக்கு, கிழக்கு ஒடிசா மாநில ஆளுனர் கணேசி லால் சம்பியன் கிண்ணத்தை வழங்கினார். இரண்டாவது இடத்தை பிடித்த ஹொங்கொங் அணிக்கு பொலிவுட் நடிகர் ராகுல் போஸ் சம்பியன் கிண்ணத்தை வழங்கினார்.
மூன்றாவது 18 வயதுக்குட்பட்ட ஆசிய பெண்களுக்கான ரக்பி சம்பியன்ஷிப் தொடர், இந்தியாவின் கிழக்கு புவனேஸ்வர் நகரில் உள்ள கலிங்கா விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில், இந்தியா, இலங்கை, சீனா, கட்டார், ஐக்கிய அரபு அமீரகம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, நேபால், சீன தைப்பே, ஹொங்கொங் என ஆசியாவில் பலம் வாய்ந்த அணிகள்; பங்கேற்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.