வலி. வடக்கு தவிசாளரின் வாகனம் மற்றும் சாரதி மீது தாக்குதல்!

வலி. வடக்கு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் பயணித்த வாகனம் மற்றும் அவரது சாரதி மீது தலைக்கவசத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதாக இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம், இளவாலை வசந்தபுரம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.40 மணிளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவாகியுள்ளது.
எனினும், தாக்கியவரின் பெயர் விபரங்கள் குறித்த முறைப்பாட்டின்போது தெரிவிக்கப்படவில்லை என பொலிஸாரால் குறிப்பிடப்பட்டுள்ளது.
இளவாலை சேந்தாங் குளம் பகுதியில் உள்ள வெள்ளவாய்க்கால் அமைக்கும் பணியினை பார்வையிட்டு விட்டு வீடு திரும்பும் போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் வலி. வடக்கு பகுதியில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் சிறிய தகப்பனார் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் வலி. வடக்கு தவிசாளர் சுகிர்தனுடன் முரண்பட்டு கொண்டதுடன் தமது கட்சி தொலைக்காட்சியில் வலி.வடக்கு தவிசாளர் தமது அணியில் இணைந்துள்ளதாக போலி செய்தியினையும் வெளியிடப்பட்டிருந்த நிலையில் இன்று குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.