ஆப்கானில் மற்றுமொரு ஊடகவியலாளர் சுட்டுக்கொலை!

ஆப்கானிஸ்தானின் கோர் (Ghor) மாகாணத்தில் வானொலி ஊடகவியலாளர் ஒருவர் ஆயுததாரிகளால் இன்று (வெள்ளிக்கிழமை) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் கடந்த இரண்டு மாதங்களில் கொல்லப்பட்ட ஐந்தாவது ஊடகவியலாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வோர்ஸ் ஒஃப் கோர் வானொலியின் தலைமை ஆசிரியர் பெஸ்முல்லா அடெல் ஐமாக் (Besmullah Adel Aimaq) என்பவரே இன்று (வெள்ளிக்கிழமை) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இவர், கோர் மாகாணத்தின் தலைநகரான ஃபிரொஸ் கோ (Firoz Koh) நகரத்திற்குச் செல்லும் வழியில் சுடப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இவர் மீதான தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
ஆப்கானில், தலிபான்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தாலும் வன்முறை அதிகரித்து வருவதால், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களை கொலைசெய்யும் நடவடிக்கைகள் அண்மைய மாதங்களில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.