ஆப்கானிஸ்தானில் இந்தியா அமைக்கவுள்ள நூலகம் யாருக்கு பயன்படும்? – டிரம்ப் கேள்வி

இந்தியாவின் நிதிப்பங்களிப்பில் ஆப்கானிஸ்தானில் அமைக்கப்படவுள்ள நூலகம் யாருக்கு பயன்படப்போகிறது? என அமெரிக்க ஜனாதிபதி டொனாட்லட டிரம்ப் கேள்வியெழுப்பியுள்ளார்.
போரினால் பெருமளவில் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் நிதிப்பங்களிப்புகளுடன் மீள்கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதனால் ஆப்கானிஸ்தானைப் புதுப்பிக்க மத்திய அரசு இதுவரை சுமார் ரூ. 21 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது.
இதற்கிடையில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தானில் பிரமாண்ட நூலகம் அமைக்க வேண்டும் என டொனால்ட் டிரம்பிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டிரம்ப் தனது அமைச்சரவை உறுப்பினர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், இவ்விடயம் தொடர்பில் கிண்டலாக கேள்வி எழுப்பினார்.
டிரம்ப் கூறுகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆப்கானிஸ்தானில் நூலகம் அமைக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டே இருந்தார். இதனால் என்ன பயன் ஏற்படும் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா? அப்படியே கட்டினாலும் ஆப்கானிஸ்தானில் யார் வந்து அதனை பயன்படுத்தப் போகிறார்கள்? என கேள்வியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.