போர் நிறுத்தம் குறித்து எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை: தலிபான்

ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் தொடர்பான எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என தலிபான் அமைப்பு அறிவித்துள்ளது.
தற்போது ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையில் நிரந்தரமான போர்நிறுத்தத்துக்கான சமரச ஒப்பந்தம் தயாராகியுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் தலிபான் அமைப்பினர் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளனர்.
இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘போர் நிறுத்தம் தொடர்பாக சில ஊடகங்கள் அண்மைக் காலமாக பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றன. போர் நிறுத்த ஒப்பந்தம் எதிலும் தலிபான் அமைப்பு கையெழுத்திடவில்லை என்பதே உண்மை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராகக் கடந்த 18 ஆண்டுகளாக தலிபான்கள் போரிட்டு வருகின்றனர். அந்நாட்டு அரசுக்கு ஆதரவாக அமெரிக்கப் படைகள் போரிட்டு வருகின்றன.
இந்நிலையில், தலிபான் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டார்.
எனினும், ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கப் படைகள் முழுவதுமாக திரும்பப் பெற்ற பிறகே அமைதிப் பேச்சுவார்த்தை தொடரும் எனவும், அமெரிக்காவுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஜனாதிபதி அஷ்ரப் கனி தலைமையிலான அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது எனவும் தலிபான் அமைப்பு தெரிவித்து வருகிறது.
பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும், மற்றொரு பக்கம் தாக்குதல் நடவடிக்கைகளிலும் தலிபான் ஈடுபட்டு வந்தது. இதைக் குறிப்பிட்டு, தலிபான்களுடன் இனி பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போவதில்லை என ட்ரம்ப் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.