ஆயுதங்களை உடைமையில் வைத்திருப்பதே பயங்கரவாத செயல் – சட்டத்தரணி குமாரவேல் குருபரன்

ஆயுதங்களை உடைமையில் வைத்திருப்பதே பயங்கரவாத செயல் என சட்டத்தரணி கலாநிதி குமாரவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் நேற்று (வெள்ளிக்கிழமை) சுற்றிவளைக்கப்பட்டது.
இதன்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், மாவீரர்களின் ஒளிப்படங்கள் மற்றும் தமிழீழ வரைபடம் என்பன கைப்பற்றப்பட்டன.
அதனையடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இதுகுறித்து கருத்து வெளியிடும் போதே சட்டத்தரணி கலாநிதி குமாரவேல் குருபரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை மீளத் திறக்கின்ற சூழல் இருக்கின்றதா என்பதை ஆராய்வதற்கு மாத்திரம் இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
வெளிப்படையாக அனைவருக்கும் தெரியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புப் பிரச்சினைக்குரிய வெடிகுண்டு எவையும் மீட்கப்படவில்லை.
ராஜபக்ஷ ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஒழுங்குவிதிகளின் கீழும் தற்போதைய உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்து நாட்டில் ஏற்பட்ட சூழ்நிலைகளைக் கையாள்வதற்கு கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டத்தின் ஒழுங்குவிதிகளின் கீழும் குற்றஞ்சாட்டப்பட்டு மாணவர்கள் இருவரும் பொலிஸாரால் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
நாம் ஒன்றைத் தெளிவாக எடுத்துரைத்தோம், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதல்களை நடத்திய தரப்பினரைக் குறிவைத்து அதனைக் கையாள்வதற்காகவே அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டது. எனவே அதற்குக் கீழ் இதனைக் கொண்டுவர முடியாது என்று தெரிவித்திருந்தோம்.
பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் இதனைக் கொண்டுவர முடியாது என்றும் சுட்டிக்காட்டியிருந்தோம். ஏனென்றால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 2ஆம் பிரிவில் ஆயுதங்கள், ரவைகள் மற்றும் அதனை ஒத்த விடயங்களும் எனக் கூறப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் படமும் பதாதைகளும் ஆயுதங்களை ஒத்தவை என பொருள்கோடல் கொள்வது பொருத்தமில்லை.
அத்துடன் ஆயுதங்கள், ரவைகள் மற்றும் அவற்றை ஒத்த எவையும் மீட்கப்படவில்லை. அதனால் அந்த ஒழுங்குவிதியின் கீழ் கொண்டுவர முடியாது எனத் தெரிவித்தோம்.
அத்துடன், இனப்படுகொலை என்ற பதாதைகள் உள்ளமையாலும் குழந்தைகள் மற்றும் இசைப்பிரியா போன்றவர்களின் படங்கள் உள்ளமை இனக்குரோதத்தை தூண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
ஆனால் தமிழ் மாணவர்கள் தமக்கான நீதிக்கான போராட்டதை முன்னெடுப்பதைத் தடுப்பது பேச்சு சுதந்திரத்தைத் தடுப்பதாக அமையும் என சுட்டிக்காட்டியிருந்தோம்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதலை நடத்திய வலையமைப்பை தேடிக் கண்டுபிடிப்பதும் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்தச் சூழலை மாற்றியமைப்பதுமே பொலிஸாரின் தற்போதைய கடமையாகும் என சுட்டிக்காட்டியிருந்தோம்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.