ஆயுதப் போராட்டத்தில் அடைய முடியாததை ஜெனிவா ஊடாக பெறுவதற்கு புலம்பெயர் அமைப்புக்கள் முயற்சி – முஸம்மில்
In இலங்கை February 6, 2021 4:13 am GMT 0 Comments 1890 by : Yuganthini

விடுதலைப் புலிகள் ஆயுத போராட்டத்தில் அடைய முயற்சித்த இலக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை பிரேரணைகள் ஊடாக புலம்பெயர் அமைப்புக்கள் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இம்மாதம் இடம்பெறவுள்ள 46ஆவது கூட்டத்தொடர் தீர்மானமிக்கதாக அமையும். மனித உரிமை ஆணையாளர் இதுவரை இராணுவத்தினருக்கு எதிராகவே குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
ஆனால் தற்போது அரசாங்கத்துக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். இலங்கை தொடர்பில் அவர் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கை நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
30வருட கால யுத்தம் முழு நாட்டுக்கும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. பாரிய போராட்டத்திற்கு மத்தியில் யுத்தம் 2009.மே மாதம் 18 ஆம் திகதி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
கடந்த அரசாங்கம் புலம் பெயர் அமைப்புக்களுக்கும், அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களுக்கும் முன்னுரிமை வழங்கியது. இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 30.1 பிரேரணைக்கு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அரச தலைவர்களுக்கும் நாடாளுமன்றுக்கும் அறிவிக்காமல் இணையனுசரனை வழங்க இணக்கம் தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் சர்வதே அமைப்புக்களின் நோக்கங்கள் நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படுத்தப்பட்டன.அரசியல் நோக்கங்களை கொண்டு பாதுகாப்பு அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் சிறைப்படுத்தப்பட்டார்கள்.
இவ்வாறு நாட்டுக்கு எதிராக செயற்பட்டதால் கடந்த அரசாங்கத்தை மக்கள் புறக்கணித்தார்கள்.
இதேவேளை நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சர்வதேச அமைப்புக்களுக்கு அடிபணிய போவதில்லை என்று ஜனாதிபதி அறிவித்தார். இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 30.1 பிரேரணையில் இருந்து அரசாங்கம் விலகிக் கொண்டமை முதற்கட்ட செயற்பாடாகும்.
ஆகவே இம்மாதம் இடம்பெறவுள்ள 46 ஆவது கூட்டத்தொடர் தீர்மானமிக்கமாக காணப்படும். தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினர் ஆயுமேந்தி போராடியதன், இலக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் பிரேரணைகள் ஊடாக புலம்பெயர் அமைப்புக்களுக்கு பெற்றுக் கொடுக்க முயற்சிக்கிறார்.
யுத்தக்குற்றங்கள் இடம்பெறவில்லை என சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் மனித உரிமை ஆணையாளர் கவனம் செலுத்தவில்லை. ஆகவே, குற்றச்சாட்டுக்கள் பொய் என்பதை இம்முறை அரசாங்கம் பகிரங்கப்படுத்தும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.