ஆரோக்கியமான உலகை உருவாக்க சூரியசக்தி உதவும்: இந்தியாவில் மைத்திரி
பசுமை, தூய்மை மற்றும் ஆரோக்கியமான உலகை உருவாக்குவதற்கான தீர்வுகளை சூரியசக்தி கூட்டமைப்பு கொண்டுவருமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாக சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் முதலாவது மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்-
”உலக சனத்தொகை வளர்ச்சியுடன் சக்திவளத் தேவையும் அதிகரித்துள்ளது. சூரிய சக்தியின் மூலம் இப்பிரச்சினையை தீர்த்துக்கொள்ளலாம். அபிவிருத்தியடைந்துவரும் மற்றும் அபிவிருத்தி அடைந்த நாடுகளும் இப்பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளன.
இதன் தாக்கத்தை உணர்ந்து இலங்கை ‘சூரியசக்தி வளப் போராட்டம்’ எனும் நிகழ்ச்சித் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. இத்திட்டத்தின் ஊடாக, 2025ஆம் ஆண்டளவில் 1000 மெகாவோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்ய எதிர்பார்த்துள்ளோம்.
அத்தோடு, சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களுக்கு உதவும் வகையில் 1 முதல் 10 மெகாவோட்ஸ் வலுகொண்ட சூரியசக்தி முறைகளை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம்.
இச்செயற்றிட்டங்களுக்காக உதவியளித்துவரும் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பிற்கும், அதற்கு தலைமைத்துவம் வழங்கிவரும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.
இச்செயற்றிட்டங்களால், எமது நாட்டில் பாடசாலைகள், வீடுகள் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் பயனடையும். அந்தவகையில், இக்கூட்டமைப்பிற்கு இலங்கை ஒத்துழைப்பையும் அர்ப்பணிப்பையும் வழங்கும்” என்றார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.