ஆற்றில் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நட்டஈடு!

திருகோணமலை – கிண்ணியா மகாவலி கங்கையில் மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களை கடற்படையினர் சுற்றிவளைத்த போது ஆற்றில் பாய்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால், இருவரின் குடும்பங்களுக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்து அவர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இதன்போது மண் அகழ்வது, மரங்கள் வெட்டுதல் போன்றவை தமது வாழ்வாதார தொழில் எனவும் அதை சட்டரீதியாக செய்வதற்கு அனுமதியை பெற்று தருமாறு ஆளுநரிடம் அங்கிருந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளித்த கிழக்கு மாகாண ஆளுநர் இது தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் கலந்துரையாடி தீர்வை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.
அண்மையில் கிண்ணியா பகுதியிலுள்ள மகாவலி கங்கையில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் கடற்படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
இதன்போது மூன்று பேர் ஆற்றில் குதித்து தப்பிச் செல்ல முற்பட்டதாக கூறப்பட்டப் போதும் பின்னர் அவர்களில் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டனர். ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.