ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நான்கு வயதுச் சிறுவன்- மீட்புப் பணி தீவிரம்

உத்தரபிரதேச மாநிலத்தில் நான்கு வயதுச் சிறுவன், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நிலையில் சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மஹோபா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பஹிரத் குஷ்வாஹா தம்பதிகளின் கணேந்திரா என்ற மகனே இவ்வாறு ஆழ்துளை்க கிணற்றில் விழுந்துள்ளார்.
கோதுமை வயலுக்கு இன்று (புதன்கிழமை) குடும்பமாகச் சென்றிருந்த நிலையில், சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், பொலிஸார் மற்றும் மீட்புப் படையினர் சிறுவனை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த ஆழ்துளைக் கிணறு 60 அடி ஆழம் கொண்டது எனவும், தற்போது குழந்தை 30 அடி ஆழத்தில் உள்ளதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
சுமார் எட்டு மணித்தியாலங்களுக்கு மேலாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில் சிறுவன் சுவாசிப்பதற்கு ஏதுவாக ஒக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதுவரை சிறுவன் நலமுடன் இருப்பதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.