இசையின் நாயகனுக்கு இன்று பிறந்தநாள்!
In சினிமா January 6, 2021 3:48 am GMT 0 Comments 1160 by : Krushnamoorthy Dushanthini

இயக்குனர் மணிரத்னத்தின் ‘ரோஜா’ திரைப்படம் மூலம் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இவருடைய முதல் திரைப்படமே இவருக்கான அங்கீகாரத்தை அளித்தது எனலாம். ஆனால் அதற்கு முன் அவர் எதிர்கொண்ட துன்பங்கள் வார்த்தையால் விவரிக்க முடியாததாகும். தனது 25 வயது வரை தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்திலேயே இருந்தேன் என ரஹ்மான் தன் சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார்.
‘தன் தந்தை இறந்த பிறகு வெறுமையே மிஞ்சியிருந்தது. என்னென்னமோ நடந்தது. நாங்கள் நன்றாக இல்லை என்பதை தெளிவாக உணர முடிந்தது. அந்த வாழ்க்கை முறைதான் எனக்கு மிகுந்த தைரியத்தையும் கொடுத்தது என அவர் குறிப்பிட்டுள்ளதன் மூலம் அவரின் இந்த வெற்றி அத்தனை சுலபமாய் கிடைத்துவிடவில்லை என்பதை உணர்த்துகிறது.
தன் தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு அதன் வருவாயில் இசை கற்க தொடங்கி பதினொரு வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிக்க சேர்ந்தார்.
எம்.எஸ்.வி ரமேஷ் நாயுடு மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் போன்ற இசைக் கலைஞர்களிடமும் பணியாற்றி கிளாசிக்கல் இசைத்துறையில் இசைப் பயின்று பட்டம் பெற்றமை என ரஹ்மான் கடந்து வந்த பாதை இன்றுள்ள இளைஞர்களுக்கு ஊக்கம் தரும் வாழ்க்கை அனுபவமாகும்.
‘ரோஜா’ திரைப்படத்தின் பாடல்கள் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெறவே யார் இந்த இசையமைப்பாளர் என்ற தேடலும் இரசிகர்கள் மத்தியில் தீவிரமாகியது.
‘ஜென்டில்மேன்’, ‘புதிய முகம்’, ‘உழவன்’, ‘திருடா திருடா’, ‘டூயட்’, ‘காதலன்’, ‘கிழக்குச் சீமையிலே’ என அடுத்தடுத்த ஹிட் ஆல்பங்கள் ரஹ்மானுக்கு தனி இரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.
தன் முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கிய ரஹ்மானுக்கு அதற்கு பின் விருதுகள் குவிந்து வண்ணமே இருக்கின்றன. 2009-ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படம் மூலம் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றார். ஆஸ்கருக்கு முன்பாகவே ‘கோல்டன் குளோப்’ மற்றும் கிராமி விருதுகளையும் பெற்றுக்கொண்டார்.
விருதுகளின் நாயகனும், இசையின் சிம்ம சொற்பனமுமான ஏ.ஆர்.ரஹ்மானின் 54ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் நாமும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.