இணை அனுசரணை நாடுகள் நிறைவேற்றவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைபில் திருப்தி இல்லை- கஜேந்திரகுமார்
In இலங்கை February 20, 2021 10:19 am GMT 0 Comments 1331 by : Yuganthini
ஐ.நா.மனித உரிமை பேரவையில் இணை அனுசரணை நாடுகள் நிறைவேற்றவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைபில் திருப்தி இல்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் கூறியுள்ளதாவது, “ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைபை கோ குரூப் நாடுகள் வெளியிட்டுள்ளன.
குறித்த வரைபு வெளியிடுவதற்கு முதல் இங்கு இருக்கக்கூடிய கட்சிகளும், சிவில் சமூகமும் இணைந்து கடிதம் ஒன்றை மனித உரிமை ஆணையாளருக்கும் உறுப்பு நாடுகளிற்கும் விசேடமாக கோ குரூப் நாடுகளிற்கும் அனுப்பியது.
பொறுப்பு கூரல் என்ற விடயம் மனித உரிமை பேரவையிலிருந்து எடுக்கப்பட்டு மேல் இடத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இரண்டாவதாக இலங்கை தொடர்பாக தொடர்ந்து நடக்கின்ற மனித உரிமைகளை அவதானிக்க மனித உரிமை அலுவலகம் ஒன்றை அமைப்பது தொடர்பிலும், மூன்றாவதாக நீதிமன்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு சாட்சியங்களை திரட்டுவது உள்ளிட்ட விடயங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் தற்போது வெளியான வரைபை நாங்கள் பார்க்கின்றபோது, இதுவரை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மிகவும் பலவீனமான வரைபாகதான் நாங்கள் அதை பார்க்க வேண்டும்.
பொறுப்புகூரல் என்ற விடயத்தை வெளியில் எடுக்க வேண்டும் என்று நாங்களே கேட்டிருக்கின்ற இடத்தில், அவ்விடயம் பெரிய அளவில் குறிப்பிடப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
சர்வதேச குற்றவியல் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற தேவை வலியுறுத்தப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. ஆனால் துரதிஸ்டவசமாக குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை தவிர்க்கப்பட்டுள்ளமையானது கடும் ஏமாற்றமாக உள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.