இந்தியாவின் உயரிய பத்மஸ்ரீ விருதுகளைப் பெறும் இரு இலங்கை பெண்கள்

இலங்கையின் இரண்டு சாதனைப் பெண்களான தேசபந்து டொக்டர் வஜிர சித்ரசேன மற்றும் மறைந்த பேராசிரியை இந்திரா தசநாயக்க ஆகியோருக்கு இந்தியாவின் பத்மஸ்ரீ விருது வழங்கப்படவுள்ளது.
இலங்கைக்கான இந்திய தூதரகத்தினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இலங்கை உறவை வலுவாக்குதல் மற்றும் தமது தனிப்பட்ட துறைகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் பங்களிப்பு வழங்கிய குறித்த இருவருக்குமே இந்தியாவின் 71ஆவது குடியரசு தினத்தில் இந்திய அரசாங்கம் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கிறது.
பத்மஸ்ரீ விருது இந்தியாவில் வழங்கப்படும் நான்காவது உயர் குடியியல் விருதாக காணப்படுகின்றது. பிரதமரால் ஒவ்வொரு வருடமும் நியமிக்கப்படும் பத்ம விருதுகள் சபையினால் பரிந்துரைக்கப்படுபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
பொதுச்சேவைக்கான கூறொன்று காணப்படும் சகல செயற்பாட்டு தளங்கள் அல்லது துறைகளில் எட்டப்படும் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் டொக்டர் வஜிர சித்ரசேன இலங்கை நடனத்துறையில் ஒரு வாழும் வரலாறாக போற்றப்படுவதுடன் பாலே நடனத்தில் புகழ்பெற்ற இலங்கையின் முதலாவது நடனக் கலைஞரும் கண்டிய நடனத்தை தனது முழுநேர தொழிலாக கொண்டிருக்கும் முதலாவது சிங்கள பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரது கலைப்பயணம் ஆறு தசாப்தங்களுக்கு மேலாகத் தொடரும் அதேநேரம் 87 வயதிலும் சித்ரசேன – வஜிரா நடன நிறுவனத்தின் தலைவராகவும் நடனப் பாடாசாலையின் அதிபராகவும் அவர் கடமையாற்றுகிறார்.
அதேபோன்று பத்மஸ்ரீ விருதினைப் பெறும் மற்றொருவரான மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்க களனி பல்கலைக் கழகத்தில் ஹிந்தி பேராசிரியராக கடமை புரிந்துள்ளார். 1943இல் இந்தியாவில் பிறந்த அவர் லக்னோ பல்கலைக்கழகத்தில பயின்றுள்ளார்.
இலங்கை கல்வி நிறுவனங்கள் மத்தியில் ஹிந்தியை அறிமுகம் செய்து மேம்படுத்திய பேராசிரியர் தசநாயக்க, 1975 ஆம் ஆண்டில் நாக்பூரில் நடைபெற்ற முதலாவது உலக ஹிந்தி மாநாட்டில் பங்குகொள்வதற்கான வாய்ப்பினைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.