ஏ.கே 47 ரக துப்பாக்கியை தயாரிக்கும் ரஷ்ய நிறுவனமான கலாஸ்நிகோவ் கன்சர்ன் நிறுவனம் இந்தியாவில் ஏ.கே 47 தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்திய நிறுவனங்களுடன் முதல் கட்ட ஆலோசனையில் இறங்கியுள்ளது.

2015-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து பல இந்திய நிறுவ னங்களுடன் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதாகவும், அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அலெக்ஸி கிரிவோ ரிச்கோ தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது.

அரசு மற்றும் தனியார் நிறுவ னங்களுடம் இது குறித்து பேசி வருகிறோம். இப்போதைக்கு பேச்சுவார்த்தை அளவில் இருப் பதால் எந்த நிறுவனங்களின் பெயரையும் வெளியிட முடியாது.

அதே சமயத்தில் பாது காப்பு அமைச்சகத்திடம் எந்த விதமான பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இதற்கு முன்பு சில நிறுவனங்களுடன் பேசி இருந்தோம். ஆனால் அவர்களிடம் ஆயுத தயாரிப்புக்கான அரசு அனுமதி இல்லை. நிலம் கையகப்படுத்தல், உற்பத்தி ஆலை உள்ளிட்டவற்றில் உள் நாட்டு நிறுவனத்தின் பங்கினை பொறுத்து முதலீடு செய்யப் படும்.

ஆரம்ப கட்டத்தில் ஆண்டுக்கு 50,000 சாதனங்களை உற்பத்தி செய்ய முடியும். வருங்காலத்தில் இந்த உற்பத்தியை அதிகப்படுத்த திட்டமிட்டிருக்கிறோம்.

எங்களுடன் இணையும் உள் நாட்டு நிறுவனம் எங்களது தொழில் நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த வருடம் நிறுவனத்தின் விற்பனை மற்றும் லாபம் நன்றாக உள்ளது. இந்த வருடத்தின் எங்களுடைய செயல்பாட்டு லாபம் சுமார் ரூ.256 கோடியாக இருக்கிறது. இந்த வருடம் முடிய இன்னும் இரு மாதங்கள் உள்ளன. எங்களுடைய மொத்த வருமானம் ரூ. 1010 கோடியாக இருக்கும். கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இது 3.5 மடங்கு அதிகம் என்றார்.