இந்தியா சீனாவில் கலாசார ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது – ராஜ்நாத் சிங்
In இந்தியா December 15, 2020 5:42 am GMT 0 Comments 1486 by : Krushnamoorthy Dushanthini

இந்தியா 2000 ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவில் கலாசார ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சம்மேளனத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “இமயமலை பகுதியில் ஆக்கிரமிப்பு முயற்சி நடந்துள்ளது. ஒப்பந்தங்கள் மீறப்படுகின்றன. இந்திய – பசிபிக் கடல் பிராந்தியத்திலும் இதே போக்கு காணப்படுகிறது. லடாக்கில் பொது எல்லைக்கோடு அருகே இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையான தருணத்தில் நம் இராணுவ வீரர்கள் அசாதாரண துணிச்சலை வெளிப்படுத்தியுள்ளனர். சீனப் படைகளுடன் மிகுந்த தீரத்துடன் போரிட்டு அவர்களை பின்வாங்கச் செய்துள்ளனர்.
இந்தாண்டு நம் இராணுவத்தினர் நிகழ்த்திய வீரச் செயல்களை கேட்டு வரும் தலைமுறையினர் பெருமை கொள்வர். எப்போது எல்லைப் பிரச்னை ஏற்பட்டாலும் இந்தியா – சீனாவின் இராணுவ பலம் ஒப்பீடு செய்யப்படுகிறது.
இந்தியாவில் தோன்றிய புத்த மதத்தை சீனாவின் 80 சதவீத மக்கள் 1949ல் நடந்த புரட்சி வரை பின்பற்றியிருந்தனர். இந்த வகையில் இந்தியா ஒருவரை கூட போருக்கு அனுப்பாமல் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவில் கலாசார ஆதிக்கத்தை செலுத்தி வந்துள்ளது.
இது போன்ற வலிமை இந்தியாவுக்கு உள்ளது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. தொழில் நிறுவனங்கள் இராணுவத்திற்கு தேவையான தளவாடங்கள் தயாரிப்பதிலும், ஏற்றுமதி செய்வதிலும் ஆர்வமுடன் ஈடுபடு வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.