இந்தியா- சீனா இடையே இராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை!
In இந்தியா February 20, 2021 3:16 am GMT 0 Comments 1159 by : Yuganthini

இந்தியா- சீனா இடையே இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் இன்று (சனிக்கிழமை) 10வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
கிழக்கு லடாக்கில் பாங்காங்சோ ஏரி பகுதியில் முதல்கட்டமாக படை விலக்கம் நிறைவு பெற்றதை அடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இந்தியா- சீனா இராணுவ தளபதிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனா இராணுவ வீரர்களிடையே கடந்த ஆண்டு மோதல் ஏற்பட்டதை அடுத்து, இருதரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டன.
இதையடுத்து பதற்றத்தை தணித்து படைகளை பழைய நிலைக்கு கொண்டு செல்வதற்கு இருதரப்பு இராணுவ தளபதிகள் இடையே 9 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதில் ஒப்புக்கொண்டபடி,கடந்த 10 ஆம் திகதி இரு நாடுகளின் இராணுவமும் படைகளை விலக்குவதற்கான நடவடிக்கையில் இறங்கின. பாங்காங் சோ ஏரியின் வடக்கு கரையிலுள்ள 4 ஆம் மலை முகடு வரை இந்திய படைகள் பின் வாங்கியுள்ளன.
அதேபோன்று எட்டாம் மலை முகடு வரை சீன படைகள் பின்வாங்கியுள்ளன. 6 மற்றும் 7 மலை முகடுக்கு இடையில் சீனா அமைத்திருந்த படகுத்துறை, ஹெலிகொப்டர், இறங்குதளம் ஆகியவற்றை அந்நாட்டு இராணுவம் அகற்றி உள்ளது.
மேலும் வீரர்கள், பீரங்கிகள் வெளியேறுவது தொடர்பான புகைப்படம் மற்றும் காணொளிகள் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தன. முதல்கட்ட படைவிலக்கம் நிறைவு பெற்றதை அடுத்து, கோக்ரா மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் உள்ள மற்ற மலை முகடுகளில் இருந்து வீரர்களை பின்வாங்க செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து விவாதிக்க, இரு நாட்டு இராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 10வது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று நடைபெற இருக்கிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.